பக்கம்:பொன் விலங்கு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பொன் விலங்கு

'இந்தக் காதல் இருக்கிறதே, இதை ஓர் ஆச்சரியமாகக் கருதுவதைவிட வேறுவிதமாகக் கருத முடியாதுபோலிருக்கிறது. ஏனென்றால் அது கதையில் வரும்போது உண்மையைப்போல் மயக்குகிறது. உண்மையில் நடக்கும்போதோ கதையைப்போல் மருட்டுகிறது; ஆனாலும் ஒரு விதத்தில் நீ பெரிய பாக்கியசாலிடா சத்தியம் உடம்பும் மனமும் அழகாயிருக்கிற கலையரசி ஒருத்தி தன்னுடைய சகலத்தையும் உனக்காக ஆத்ம சமர்ப்பணம் செய்யக் காத்திருக்கிறாள். யாருடைய சலங்கை கட்டிய நளின பாதங்கள் பல்லாயிரக் கணக்கான இரசிகர்களுடைய இதயத்தில் செளந்தரியக் கனவாக ஆடிக்கொண்டிருக்கின்றனவோ அவளுடைய இதயத்தில் உன் பாதங்கள் நிறுத்தி வைத்து வணங்கப்படுகின்றன. உன்னுடைய பெட்டியில் புத்தகங்களைத் தேடும்போது அந்தக் கடிதம் என் கையில் கிடைத்து அதை நான் படித்த சமயத்திலேயே நீ அடைந்திருக்கும் தூய்மையான காதலை நினைத்து நினைத்துப் பெருமைப்பட்டேன். உன்னிடம் சொன்னால் என்ன நினைத்துக்கொள்வாயோ என்று தயக்கமாக இருந்தது. எவ்வளவுதான் நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனுக்கு அந்தரங்கமாக அனுப்பப்பட்டிருக்கிற ஒரு கடிதத்தை எடுத்துப் படிக்கத் துணிவது குற்றம் தானே? நம்மளவுக்கு நாம் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலும் பிறருடைய இரகசியங்களை அறிந்துகொள்ள முயலும்போது நமது நாணயம் தவறி விடுகிறதே?" என்று குமரப்பன் தனக்குத்தானே வருத்தப்பட்டுக் கொள்வது போல் பேசினான்.

"நாணயக் குறைவான எந்தக் காரியத்தையும் நீ செய்து விட்டதாக நான் நினைக்கவில்லை குமரப்பன்! நீ செய்த காரியம் உன் நண்பனிடம் உனக்கு இருக்கும் உரிமையின் நெருக்கத்தை நிரூபிக்கிறது. அவ்வளவுதான்' என்று சத்தியமூர்த்தி மனம் விட்டுக் கூறிய பின்பும், "அதெல்லாம் இல்லை! நீ மிகவும் பெருந்தன்மையாக என்னை மன்னிக்கிறாய்! அதற்காக நன்றி. இதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கிறது, ஒரு துயரமும் இருக்கிறது. உன் பெட்டியைத் திறந்து நானாகவே இதைத் தெரிந்துகொண்டு உன்னை இப்படித் திகைக்கச் செய்ததற்காகத் துயரப்படுகிறேன். நான் எதைத் தெரிந்து கொண்டேனோ அதனால் என் நண்பன் மகா பாக்கியசாலி என்றறிந்ததனால் மகிழ்கிறேன்" என்றான் குமரப்பன். இருட்டிய பின்பு சிறிது நேரம் ஏரிக்குள் படகிலேயே சுற்றிக் கொண்டிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/394&oldid=595634" இலிருந்து மீள்விக்கப்பட்டது