பக்கம்:பொன் விலங்கு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 பொன் விலங்கு

பலாப்பழப் பாயசமும் கொஞ்சம் வறுவலும், அவியலும் எடுத்து வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

- சத்தியமூர்த்திக்குப் பாயசம் வைப்பதும், பண்டிகைகள் கொண்டாடுவதும் அதிகமாகப் பிடிக்காத காரியங்கள். 'இந்த தேசத்தில் வயிற்றுக்குச் சோறில்லாத கடைசி ஏழை இருக்கிறவரை நம் வீடுகளில் பாயசமும் பண்டிகைகளும் இல்லை. தெருவோரத்தில், மரத்தடியில், புழுதியில் படுத்துறங்கும் அநாதைகள் இருக்கும்வரை நாம் கட்டிலும் மெத்தையும் விரித்துப் படுத்திருப்பதும் பாவம்' என்று கல்லூரி நாட்களில் மாணவர்களிடையேயும், மற்ற மேடைகளிலும் அடிக்கடி ஆவேசமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறான் அவன். வீட்டிலோ தெரிந்தவர்களுடனோ, அமர்ந்து உண்ணும்போது பாயசம் பரிமாறப்படுகிற வேளையில் இலையை மறித்துக் கை நீட்டி மறுத்துவிடுவது அவன் வழக்கம். பண்டிகை தினங்களில் புதிது உடுத்திக் கலகலப்பாகச் சுற்றித் திரிவதையும் அவன் விரும்பியதில்லை. எல்லாரும் மனக்குறைவோ, பணக்குறைவோ இன்றி ஒரளவு வசதியாக வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தின் பொதுத் திருவிழாக்களாக இந்தப் பண்டிகைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்று உண்ணவும் உடுக்கவுமே திண்டாடுகிற பலரை நம்மைச் சுற்றிலும் வைத்துக்கொண்டு அவர்களுடைய வயிறெரிய ஒருசிலர் மட்டுமே விருந்துண்டு புதிது உடுத்தித்திரிவது அநாகரிகம் என்பது அவன் கருத்து. இவற்றையெல்லாம் சொல்லி விவாதிப்பதற்கோ பேசுவதற்கோ அந்தப் பாலக்காட்டுப் பேராசிரியர் பொருத்தமான மனிதர் இல்லை என்று அவன் கருதியதால், அவரிடம் அதிகம் விவாதிக்காமல், தனக்கு இனிப்புப் பிடிக்காது' என்று சொல்லிப் பாயசத்தை மறுத்துவிட்டான். அப்படி மறுத்த பின்பும் அவர் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என விடேன் தொடேன் என்று வற்புறுத்தியதால் சத்தியமூர்த்தி தேநீர் மட்டும் பருகினான். இரண்டு மூன்று தினங்களுக்கு முன் ஒருநாள் தற்செயலாக உலாவப் போய்க்கொண்டிருந்தபோது லேக் அவென்யூ சாலையில் எதிர்ப்பட்ட இந்தப் பேராசிரியரை நண்பன் குமரப்பனுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததையும் அப்போது குமரப்பன் இவரிடம் பேசிய பேச்சுகளையும் இன்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் சத்தியமூர்த்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/400&oldid=595642" இலிருந்து மீள்விக்கப்பட்டது