பக்கம்:பொன் விலங்கு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 425

முடியாமல் அவனுள்ளே குமுறியது ஓர் எண்ணம். மோகினியின் இதயத்துய்மையையும் குணநலன்களையும் தெரிந்து கொள்ளாமல் சற்று முன் தந்தை அவளைப் பற்றிக் 'கூத்தாடுகிறவள் என்று எடுத்தெறிந்து சொல்லியிருந்த வார்த்தை அவன் மனத்தைப் புண்படுத்தியிருந்தது.

மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடந்து முடிந்து விட்ட இந்தக் கல்யாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா? என்று அவள் என்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. 'என் தந்தையே அந்த மரியாதையைச் செய்யத் தயாராயில்லை என்று எனக்குத் தெரிந்து விட்டது' என்பதை எண்ணிய போது சத்தியமூர்த்தியின் மனத்தில் நம்பிக்கை தளர்ந்தது. எந்த இலட்சியவாதியும், எத்தகைய தைரியசாலியும் சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்கவேண்டிய சில பிரச்னைகள் உலகில் நிரந்தரமாக இருப்பதை அவன் உணர்ந்து கொண்டு மனத்தில் தயங்கினான்.

"ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக உன்னிடம் இந்த மனிதர் எதற்காக இப்படிச் சண்டை பிடிக்கிறார் சத்யம்? யாரோ மூன்றாம் மனிதரையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உன்னிடம் சண்டை பிடிக்கிறாரே?" என்று அம்மாவே அப்பாவைப் பற்றி அவனிடம் குறைபட்டுக் கொண்டாள். எந்தச் சண்டையைத் தவிர்ப்பதற்காக அம்மா அவனை உள்ளே கூப்பிட்டிருந்தாளோ அந்தச் சண்டை விரைவில் உள்ளேயும் அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது. .

“என்னடா, நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ பெண்டு செட்டியைப் போல உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு விட்டாய்?" என்று கேட்டுக் கொண்டே அப்பா உள்ளே வந்தார். கண்ணாயிரமும் ஜமீன்தாரும், அவரைச் சரியானபடி முறுக்கேற்றி யிருக்கிறார்களென்று தெரிந்தது. “வயது வந்த பிள்ளையை வேற்று மனிதர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு இப்படிச் சண்டை பிடிக்கிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?" என்று அம்மா குறுக்கிட்டுக் கேட்டத்தைக் கூட அவர் இலட்சியம் செய்யவில்லை. அம்மாவின் பேச்சு காதில் விழுந்ததாகவே காண்பித்துக் கொள்ள வில்லை அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/427&oldid=595671" இலிருந்து மீள்விக்கப்பட்டது