பக்கம்:பொன் விலங்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 41

பக்கமாகத் திரும்பி, "நீங்களும் இங்கேயே சாப்பிடலாம் அல்லவா?" என்று சுபாவமாகக் கேட்டார். தந்தையே அவரையும் அழைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டு அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு வந்திருந்த பாரதி தான் எதிர்பார்த்தபடியே அது நடந்ததைக் கண்டு மகிழும் மனத்தின் ஆவலோடு சத்தியமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய அந்த ஆவல் வீண்போகவில்லை. எதிர்பாராத அந்த அழைப்புக்கு என்ன மறுமொழி கூறுவதென்று ஓரிரு கணங்கள் தயங்கியபின் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சத்தியமூர்த்தி. அவன் சாப்பிட வருவதற்குச் சம்மதித்த அந்த உற்சாகத்தைத் தனிமையில் கொண்டாட விரும்பியவளைப்போல் அவர்களை முந்திக்கொண்டு உள்ளே சென்றாள் அவள். போகும்போது அவளுடைய இதழ்கள் மனத்துக்குப் பிடித்தமான பாடலின் ஆரம்பம் ஒன்றை இனிய குரலில் முணுமுணுத்துக்கொண்டே செல்வதையும் சத்தியமூர்த்தி கேட்டான். அவளைச் சந்தித்த சில நாழிகை நேரத்திலேயே அவளுடைய இதயத்தின் குரலை அவன் கேட்க முடிந்திருந்தது. இப்போதோ அவளுடைய நாவில் ஒலிக்கும் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டான்.

சாப்பிடுவதற்காக அவனை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு சென்றபோது பூபதி அவனிடம் உள்ளடங்கிய தொனியில் மெல்ல இதைச் சொன்னார்: 'உங்களிடம் இளமைக்கே உரிய துடிதுடிப்பும் உணர்ச்சிவசப்படும் இயல்பும் அதிகமாக இருக்கின்றன. விநயமாக நடந்து கொள்ளும் தன்மை குறைவாயிருக்கிறது. உங்களிடம் நான் காணும் படிப்பின் ஆழத்தையும், புத்தியின் கூர்மையையும் எடுத் தெறிந்து பேசிவிடுகிற இந்த இளமைக்குணம் பாழாக்கிவிடும். நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதான மாகவும், விநயமாகவும் பேசுவதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்." -

இதற்கு சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. மெளனமாக அவரோடு உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தான். பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/43&oldid=595674" இலிருந்து மீள்விக்கப்பட்டது