பக்கம்:பொன் விலங்கு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 443

பேசவில்லையே என்று நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக் கூடாது. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி மாதிரி. இந்த ஜமீன்தார் இல்லேன்னா வியாபாரத்திலும் தொழில் துறையிலும் நான் இவ்வளவு செழிப்பாக வளர்ந்து முன்னுக்கு வந்திருக்க முடியாது. இவர் பரம உபகாரி. இப்போது நம் கல்லூரி இருக்கிறதே. அந்த இடம் முழுவதும் ஒரு காலத்தில் இவருக்குச் சொந்தமான பழத் தோட்டங்களாக இருந்தன. அவ்வளவு இடத்தையும் சும்மாவே எனக்குக் கொடுத்திட்டார். வியாபாரத்திலும் தொழிலிலும் கூட எனக்கு நொடிப்பு வந்தபோதெல்லாம் நிறைய கைகொடுத்து உதவியிருக்கிறார். நான் இவரை வெறும் 'பிஸினஸ் பார்ட்னரா மட்டும் நினைக்கிறதில்லை. ரொம்ப ரொம்ப வேண்டிய சினேகிதராகவே நினைக்கிறேன். நானும் என் பெண்ணும் எப்போது மதுரைக்கு வந்தாலும் இவருடைய பங்களாவில்தான் தங்குவது வழக்கம். இது எங்களுடைய சொந்த வீடுபோல, மல்லிகைப் பந்தலிலே நம் ஜமீன்தாருக்கும் அரண்மனை போல் பெரிய பங்களா இருக்கிறது. பாவம் சின்ன வயதிலேயே மனைவியைப் பறிகொடுத்து விட்டார். கலைத் துறையில் நிறைய அபிமானம் உடையவர்; பரத நாட்டியம்னா உயிர். கர்நாடக சங்கீதம்னாப் பசி தாகமே தெரியாது.” .

ஜமீன்தார் புகழ்பாடும் படலத்தில் பொறுமை இழந்த சத்திய மூர்த்தி துணிந்து, பூபதியின் பேச்சில் நடுவே குறுக்கிட்டான்.

"சார்! உங்களுடைய கடிதத்தில் நீங்கள் டில்லிக்குப்புறப்படு முன் என்னிடம் ஏதோ முக்கியமாகப் பேச வேண்டும் என்று எழுதி யிருந்தீர்கள் உங்களுக்குக் குடியரசுத் தலைவர் 'பத்மபூரீ விருது வழங்கப் போவதைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான பாராட்டுதல்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..." என்று சத்தியமூர்த்தி கூறிக்கொண்டே வந்தபோது பூபதிக்குப் பின்புறமிருந்து வளைகள் கலகலத்து ஒலிக்கும் இனிய ஒசைகேட்டது. சத்தியமூர்த்திநிமிர்ந்து பார்த்தான். பாரதி வந்து நின்று கொண்டிருந்தாள். தந்தைக்கு முன்னால் விட்டுக் கொடுக்காமல் நடந்துகொள்ள விரும்பிய பாரதி, "வணக்கம் சார்' என்று அவனை நோக்கிக் கைகூப்பினாள். அவனும் பதிலுக்குப் புன்முறுவல் பூத்து அந்த வணக்கத்தை ஏற்றுக்கொண்டு இந்த இரண்டு வார்த்தைகளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/445&oldid=595691" இலிருந்து மீள்விக்கப்பட்டது