பக்கம்:பொன் விலங்கு.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 பொன் விலங்கு

ஏறக்குறைய இரவு இரண்டு மணிவரை கல்லூரிப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண்களைக் (மார்க்) கூட்டிப்போட்டுக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அதற்கு அப்புறமும் உறக்கம் வராமல் சிறிது நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ஆழ்ந்த உறக்கம் அன்றிரவு அவனுக்குக் கிடைக்கவேயில்லை. மறுநாள் காலையில் அவன் எவ்வளவு விரைவாக எழுந்திருந்தானோ அவ்வளவு விரைவாக எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டுவிட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்குள் அவன் நுழையும்போது ஆறு அல்லது ஆறேகால் மணி இருக்கும். அப்போதுதான் ஆஸ்பத்திரி மெல்லமெல்ல விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. நர்ஸுகள் சுறுசுறுப்பாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்கும் கையுமாக நோயாளிகளுக்குக் காப்பி எடுத்துக்கொண்டு வருகிறவர்களும், பழங்களும் கையுமாக நோயாளிகளைப் பார்க்க வருகிறவர்களுமாக ஆஸ்பத்திரி வாசலில் கலகலப்பு ஆரம்பமாகியிருந்தது.

மோகினி இருந்த ஸ்பெஷல் வார்டில் அவன் நுழைந்தபோது ஓர் அற்புதமான கண்ணுக்கினிய காட்சியைக் கண்டான். அப்போதுதான் பல்விளக்கி முகம் கழுவிக்கொண்டு வந்திருந்த மோகினி தன் அடர்ந்த கருங்கூந்தலை அவிழ்த்துக் கோதிக் கொண்டிருந்தாள். தலையை ஒருபுறமாகச் சாய்த்து வளை விளையாடும் பொன்னிறக் கையினால் கூந்தலைக் கோதிவிட்டுக் கொண்டிருந்த கோலத்தில் தோகை விரித்தாடும் அழகிய மயிலைப் போல் காட்சியளித்தாள் அவள். முகத்தில் சரிபாதி வந்து விழுந்து மேகக்காடு கவிழ்ந்தாற்போல் தொங்கி மறைத்துக் கொண்டிருந்த நிலையில் கருமைமின்னிச் சிற்றலையோடு நெளியும் அந்தக் கூந்தலின் நறுமணம் சத்தியமூர்த்தியைக் கிறங்கச் செய்தது. தனிமையில் தன்னிச்சையாகக் கூந்தலை அவிழ்த்து விட்டுக் கோதிக் கொண்டிருந்தவள் திடீரென்று அங்கு அவனைப் பார்த்ததும் நாணத்தோடு சிரித்துக் கொண்டே அவசரம் அவசரமாகக் கூந்தலை அள்ளி முடியத் தொடங்கினாள். அந்த அவசரத்திலும் பரபரப்பிலும் நாணத்திலும் கூட அவள் மிக அழகாக இருந்தாள். கைகளுக்கு அடங்காத அந்தப் பெருங் கூந்தலைக் கோணல் மாணலாகச் சுற்றிக் கொண்டை போட்டுக் கொண்டபோது அவன் கண்களுக்கு அவள் இன்னும் அழகாகத் தெரிந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/452&oldid=595699" இலிருந்து மீள்விக்கப்பட்டது