பக்கம்:பொன் விலங்கு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 461

விமான நிலைய எல்லைக்குள்ளிருந்து இந்தப் பிரதான சாலைக்கு வந்ததும் அருப்புக் கோட்டையிலிருந்து மதுரைக்கு திரும்புகிற வெளியூர் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கையை நீட்டி அந்தப் பஸ்ஸில் இடம்பிடித்து நகருக்குள் வந்துசேர்ந்தான் அவன். எதற்கும் கலங்காத அவன் மனம் காரணமின்றியோ அல்லது இன்னதென்று நிர்ணயித்துச் சொல்ல முடியாத பல காரணங்களாலோ குழம்பியிருந்தது. நகருக்குள் நுழைந்து பஸ் நிலையத்துக்குப் போவதற்கு முன்பாகத் தெற்கு வெளி வீதியிலேயே இறங்கிப் பாண்டிய வேளாளர் தெரு வழியே நடந்தான் அவன். பாண்டிய வேளாளர் தெருவும் பெருமாள் கோவில் தெருவும் சந்திக்கிற இடத்தில் கூடலழகப்பெருமாள் கோவில் தேர் தகரக் கூடாரமிட்டு மூடப்பட்டு நின்று கொண்டிருந்தது. தேர் ஓடாத காலங்களில் நிலையில் நிற்கும்போது மூன்றுபுறமும் தகர அடைப்புகளின் மேல் சினிமா விளம்பரச் சுவரொட்டிகளும், மல்யுத்த விளம்பரங்களும் ஒட்டப்பட்டிருப்பது அந்த இடத்து மரபு நடந்துவந்துகொண்டிருந்த சத்தியமூர்த்தி தற்செயலாக நிமிர்ந்து பார்த்தபோது தேர் அடைப்பின்மேல் தன்னுடைய கவனத்தைக் கவரக்கூடிய விளம்பரம் ஒன்றைக் கண்டான். மதுரை நகரப் பெருமக்கள் மேன்மை தங்கிய மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்கு ஐம்பதாண்டுகள் நிறைந்து விட்டதற்காகப் பொன்விழாக் கொண்டாடி கெளரவிக்கவிருப்பதை அறிவிக்கும் விளம்பரம் அங்கே ஒட்டப்பட்டிருந்தது. கையில் பசையுள்ள பெரும் புள்ளிகள் சிலர் தாங்களே பணத்தைக் கொடுத்து இப்படிப்பட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொள்வதாகச் சத்தியமூர்த்தி கேள்விப் பட்டிருந்தான். குடிப் பழக்கத்தைப் போலவோ சூதாட்டத்தைப் போலவோ புகழும் சிலருக்குத் தவிர்க்க முடியாத தேவைகளாக இருக்கிறதென்பது பொது வாழ்வைக் கூர்ந்து கவனித்ததிலிருந்து அவன் தெரிந்து கொண்ட உண்மை; இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பூபதி டில்லியிலிருந்து மதுரைக்குத் திரும்புகிற தினத்தன்று அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கையில் பசையுள்ளவர்கள் புகழையும், பெருமையையும்கூட மிகவும் மலிவான விலைக்கு வாங்கமுடிகிறதென்று நினைத்தான் அவன். மனம் ஒருநிலை கொள்ளாமல் ஒரு நோக்கமில்லாமல் எங்காவது சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும் போல் தவித்தது. சத்தியமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/463&oldid=595711" இலிருந்து மீள்விக்கப்பட்டது