பக்கம்:பொன் விலங்கு.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 495

வகித்தார். பூபதியின் சிறப்புகள், தொண்டு, பெருந்தன்மை, இவற்றைப்பற்றியோ, அவருடைய மரணத்தினால் ஏற்பட்டிருக்கும் பெரிய தேசிய நஷ்டத்தைப் பற்றியோ ஒன்றுமே கூறாமல் தமக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்த சில சொந்த நிகழ்ச்சிகளை மட்டுமே பேசி மாணவர்களைச் சலிப்படையச் செய்து கொண்டிருந்தார் முதல்வர்."என் மேல் அவருக்கு மிகவும் பிரியம் உண்டு. ஒருமுறை மாணவர் ஒருவர் ஆத்திரப்பட்டு என்னைக்கத்தியால் குத்த முயன்று நான் தோள் பட்டையில் கத்திக் குத்து காயத்தோடு ஆஸ்பத்திரியில் கிடந்தேன். அப்போது என்னைத் தேடிக்கொண்டு தம் மகளோடு ஆஸ்த்திரிக்கே வந்து விட்டார் நம்முடைய கரஸ்பான்டென்டு" என்று இப்படித் தம்மைப் பற்றியே பேசி முடித்தார் முதல்வர். மற்ற ஆசிரியர்களில் சிலரும் இதே விதமாகத்தான் பேசினார்கள். மாணவர்களில் இரண்டொருவர் மிக நன்றாகப் பூபதியின் கல்விப் பணியைப் பற்றியும் அவருடைய மரணத்தினால் தேசத்துக்கு ஏற்பட்டு விட்ட பேரிழப்பைப் பற்றியும் உணர்ந்து பேசினார்கள்.

கடைசியாகச் சத்தியமூர்த்தி பேச எழுந்திருந்தான். 'இந்த மலைகளும் இங்கு நம்மைச் சூழ்ந்திருக்கும் வானளாவிய கல்லூரிக் கட்டிடங்களும், கடந்த சில தினங்களாகக் களையிழந்து போயிருக்கின்றன, நம்மைப் பார்ப்பவர்கள் கேட்பவர்கள் எல்லாரும் ஓர் உண்மையான பெருந்தன்மையாளரின் மரணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். நாம் கண்ணில் நீர் நெகிழ நம்மிடம் விசாரிப்பவர்களுக்கு மறுமொழி கூறவும் முடியாமல் தயங்கி நின்று விடுகிறோம். ஒல்லையூர்ப் பெருஞ்சாத்தன் இறந்த பின்பு அந்த வள்ளலின் வீட்டு வாயிலிலிருந்த முல்லைக் கொடியைப் பார்த்து, 'வல்வேற் சாத்தன்மாய்ந்த பின்றை - முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?” என்று குடவாயிற் கீர்த்தனார் புறநானூற்றில் கேட்பதுபோல் இந்த அழகிய மலை நகரத்தில் உள்ள பூஞ்செடிகளையும், கட்டிடங்களையும், அருவிகளையும், ஏரிகளையும் பார்த்து உங்களுக்கு வளம் தந்த பெருமகன் மறைந்துவிட்டானே தெரியுமா? என்று கேட்கத் தோன்றுகிறது நமக்கு நம்மைக் கண்கலங்கச் செய்துவிட்டு அவர் போய்விட்டார். இந்த உலகில் நல்லவர்களும், நல்லெண்ணமும் விரைவில் அழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/497&oldid=595748" இலிருந்து மீள்விக்கப்பட்டது