பக்கம்:பொன் விலங்கு.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 - பொன் விலங்கு

சாலையில் போலீஸ்காரர்கள் புடைசூழ சத்தியமூர்த்தி செல்வதைப் பார்த்து விட்டாள். அவனும் அவளுடைய காரைப் பார்த்தான். உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டுத் துடிக்கும் நெஞ்சுடன் பாரதி கீழே இறங்கி நின்று பார்த்தாள்.

"இவரு ஏதோ பையன்களைத் தூண்டிவிட்டு ராத்திரியோடு ராத்திரியா... ஹாஸ்டலுக்கு நெருப்பு வச்சிட்டாராம். அதனாலே ஜமீன்தார்.போலீசிலே சொல்லி ஆளை உள்ளார வைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறாரு" என்று அவள் கேட்காமலே தானாகச் சொல்லத் தொடங்கினான் உடன் இருந்த டிரைவர். இதைக் கேட்டுப் பாரதியின் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கீழே வளைவாகச் சரிந்து இறங்கும் செம்மண் சாலையில் நோக நோக நடந்து செல்லும் சத்தியமூர்த்தியின் பொன்னிறப் பாதங்கள் மேற்புறத்துச் சாலை யிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்களுக்கு நன்றாகத் தெரிந்தன. நெடுநாட்களுக்குப் பின்பு அந்தப் பளிங்கு நிறப் பாதங்கள் அவளுக்கு இன்று காட்சி கொடுத்தன. அவள் நின்ற இடத்திலிருந்து அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனுடைய நடையில் அதே பழைய கம்பீரமும் பெருமிதமும் இருந்தன. ஆனால் பொய்யும் அநீதியும் மலிந்துவிட்ட இந்த உலகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூசினாற்போல் அவனுடைய தலை மட்டும் சற்றே தாழ்ந்து கீழ் நோக்கிக் குனிந்திருந்தது. அவனுடைய கைகளும், கால்களும் படிகிற இடமெல்லாம் ரோஜாப்பூப் பூத்துக் கொட்டுவதாகத்தான் முன்பு ஒரு சமயம் அவள் கற்பனை செய்திருக்கிறாள். கல்லூரி விடுதிக்கு நெருப்பு வைக்க அவனுடைய கைகள் துண்டியிருக்க முடியுமென்று இன்று அவளால் நினைப்பினுள் கற்பனை செய்யவும் முடியவில்லை. தந்தையின் மரணத்துக்குப்பின் பல நாட்களாக அவள் கல்லூரிக்கே போகவில்லை. அதனால் கல்லூரி நடைமுறைகள் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிய வழியில்லாமல் போய் விட்டது.

மஞ்சள்பட்டி ஜமீன்தாரும், கல்லூரி முதல்வரும் அடிக்கடி கல்லூரி நிர்வாக சம்பந்தமாக வீட்டில் சந்தித்துப் பேசிக் கொள்வதை தானும் அதே வீட்டில் இருந்ததன்காரணமாகச் சில சமயங்களில் பாரதி கண்டிருக்கிறாள். சத்தியமூர்த்திக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/536&oldid=595792" இலிருந்து மீள்விக்கப்பட்டது