பக்கம்:பொன் விலங்கு.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 பொன் விலங்கு

பதில் பேச முடியாமல் மனம் கலங்கிப் போயிருந்த சத்தியமூர்த்தி, ஆமாம்-என்பதற்கு அறிகுறியாகத் தலையசைத் தான். குமரப்பனே மேலும் பேசினான்.

'பாவம் அந்தப் பெண் அழுதுகொண்டே படியேறிக் கடைக்குள் போகிறாள். ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மிகவும் மலிவாக விலைக்கு வாங்கிவிட முயல்கிற இந்த ஜமீன்தாரை நினைத்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது; ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை விலைக்கு வாங்கி விடுவதற்குப் பட்டு, தங்கம், வைரம், கார், பங்களா-இவையெல்லாம் மிகவும் சாதாரணமான விலைகள். சாதாரணமான விலைகளைக் கொண்டு அசாதாரணமான அன்பைப் பேரம் பேசி வாங்கிவிட முடியும் என்று நினைப்பதே பேதைமை."

"அப்படிச் சொல்வதற்கில்லை, குமரப்பன்! இந்த மோசக்கார உலகத்தில் சில சமயங்களில் அசாதாரணமான பொருள்களும்கூடச் சந்தர்ப்பவசத்தினால் சாதாரண விலைக்குப் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் அநுதாபப்பட்டுத் தவிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?' என்று உள்ளடங்கிய ஆத்திரத்தோடு சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு நடப்பதை நிறுத்திவிட்டு நண்பனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் குமரப்பன். மோகினியின் அன்பு சாதாரணமான விலைக்குப் போய்விடும் என்று தான் ஒரு கருத்தைக் கூற நேர்ந்து, சத்தியமூர்த்தி அதைக் கடுமையாக மறுத்திருந்தால் குமரப்பன் அப்போது சிறிதும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான். சத்தியமூர்த்தியே அப்படிக் கூறியதைக் கேட்டுத்தான் அவனுக்குத் திகைப்பாயிருந்தது. மோகினி ஜமீன்தாரோடு ஜவுளிக் கடைக்கு வந்ததை விரும்பாமல் சத்தியமூர்த்தியின் மனத்தில் கோபமோ-ஆத்திரமோமூண்டிருக்கவேண்டும் என்று குமரப் பனுக்குப் புரிந்தது. அவன் நண்பனைச் சமாதானப்படுத்த விரும்பினான். -

'உன் கோபம் காரணமற்றது சத்தியம்! அவள் என்ன செய்வாள் அபலைப்பெண் பாவம் அவளுடைய நிலையை எண்ணி அநுதாபப்பட வேண்டிய நீயே இப்படிப் பேசுவதை

நினைத்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது." *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/578&oldid=595837" இலிருந்து மீள்விக்கப்பட்டது