பக்கம்:பொன் விலங்கு.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 - பொன் விலங்கு

அதற்கும் அதிக நாள் இல்லை. எல்லாமே துரிதமாகச் செய்யவேண்டும். அவர்கள் செலவில் அழைத்துப் போகிறார்கள் என்றாலும் உன் கைச்செலவுக்கும் கொஞ்சம் பணம் கொண்டு போவது நல்லது. அதற்கு நமது ரிசர்வ் பாங்கிலுள்ள எக்ஸ்சேஞ்சு கண்ட்ரோலுக்கு இப்போதே மனுச்செய்து வைக்கவேண்டும்

'எஜூகேஷனல் டூர் என்பதால் அதிக சிரமுமில்லாமல் பெர்மிட் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்" என்று தொடங்கிக் கலெக்டர் அப்போதே பிரயாணம் அருகில் வந்துவிட்டதுபோல் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். டெல்லியிலிருந்து அவனுக்கு வந்திருந்த 'இண்டர்வ்யூ கார்டையும் பிற விவரங்களையும் அவன் கையில் கொடுத்துக் கலெக்டர் அவர்களிருவருக்கும் விடையளிக்கும்போது இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் விழித்திருந்து கலெக்டரின் மகன் அவர்களைக் காரில் பேச்சியம்மன் படித்துறைத் தெரு வரையில் கொண்டுவந்துவிட்டுச் சென்றார். சத்தியமூர்த்தியும், குமரப்பனும் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டுக் காத்துக்கொண்டு நின்றார்கள். அம்மா வந்து கதவைத் திறந்தபோது, அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'என்னடா சத்தியம் இந்த நேரத்துக்கு எந்த இரயிலில் வந்தாய்? அப்பாகூட ஏதோ ஜமீன்தார் காரியமாக அங்கேதான் மல்லிகைப் பந்தலுக்கு வந்திருக்கிறார்? உன்னை வந்து பார்த்தாரோ இல்லையோ? ஏது இப்படித் திடீரென்று புறப்பட்டு வந்தாய்?' என்று கேட்டவளுக்கு உள்ளே போய் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான், சத்தியமூர்த்தி. குமரப்பனும் அன்றிரவு அங்கேயே தங்கினான். வெளிநாட்டுப் பயணத்தைப்பற்றிக் கூறியபின், "அப்பாவுக்கும் எனக்கும் தகராறு.

'வீட்டு வாசற்படி ஏறாதே, முகத்திலே விழிக்காதே' என்று கத்திவிட்டுப் போயிருக்கிறார்.நான்ஜமீன்தாரிடத்திலே மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று அப்பா முரண்டு பிடித்தார். நான் முடியாதென்று மறுத்தது பொறுக்காமல் அவருக்கு ஆத்திரம் வந்தது.அதற்கப்புறம் அவரும் என்னைப் பார்க்க வரவில்லை"

என்று அவன் கூறியபோது அம்மா பெருமூச்சு விட்டாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/640&oldid=595907" இலிருந்து மீள்விக்கப்பட்டது