பக்கம்:பொன் விலங்கு.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 651

சத்தியங்களையும், சொல்லிய காதல் மொழிகளையும் மறந்து, பணத்துக்கும் பகட்டுக்கும் பயந்து கோழையாகி விட்ட ஒரு காதலியையும் மறந்து, விலகி எங்காவது போய்விட வேண்டும் போல் அவனுடைய கால்கள் ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டுதான் இருந்தன. .

'ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக செலுத்துகின்ற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகைக் குரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்று முன்பு ஒருநாள் தான் அவளிடம் கூறியது இப்போது அவனுக்கு நினைவு வந்தது. அந்த அழுகுரல் வெளிப்படாத அழுகுரலாகத் தன் மனத்தின் மோனமான துக்கமாய் வந்து நிறைந்துவிட்டதை இன்று அவன் உணர்ந்தான். . -

இதே வேளையில் பேதை மோகினியோ பாரதி தன்னிடமிருந்து வாங்கிப் பதிவுத் தபாலில் மதுரைக்கு அனுப்பிய கடிதம் கிடைத்து அதைப் படித்ததனால் தன் தெய்வத்தின் மனத்தில் தன்னைப்பற்றி ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்பத் தொடங்கியிருந்தாள். ஜமீன்தாரோ அவள் மனம் வெறுக்கிற காரியங்கள்ை ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கியிருந்தார். புதுப்பித்துக் கட்டிய மல்லிகைப் பந்தல் ஜமீன் மாளிகையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஒருநாள் சாயங்காலம் பாரதியையும் மோகினியையும் காரில் அழைத்துக் கொண்டு போனார். பாரதி கூட வருகிறாள் என்ற நம்பிக்கையில் மோகினி மறுக்காமல் புறப்பட்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தைச் சுற்றிக் காட்டும்போது, "பாரதீ இன்னும் கொஞ்சநாளில் நாங்கள் எல்லாரும் இங்கே வந்து விடுவோம். அப்புறம் மல்லிகைப் பந்தல் கல்லூரி நிர்வாகியின் அலுவலகமும்-பிரபல நடனராணி மோகினியின் பங்களாவும்-மஞ்சள்பட்டி ஜமீன் அரண்மனையும்-எல்லாம் இதுதான்!...” என்று ஜமீன்தார் சிரித்தபடி கூறிய வேளையில் மோகினி, தீயை மிதித்தவள்போல் திகைத்தாள். ஜமீன்தாரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/653&oldid=595921" இலிருந்து மீள்விக்கப்பட்டது