பக்கம்:பொன் விலங்கு.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 பொன் விலங்கு

சாய்ந்தாள் மோகினி, தூக்கம் வரவில்லை. உடல் சோர்வாகவும் இலேசாகவும் இருந்தது. இருட்டிலேயே எழுந்துபோய் அலமாரியிலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு-பின்பு தண்ணீர்க் கூஜாவைத் திறந்து ஒசையில் பாரதி விழித்துக் கொண்டு 'யாரது?" என்று கேட்டாள். "நான்தான் மோகினி, தண்ணீர்த் தாகம் நாக்கை வறட்டுகிறது" என்று பதில் கூறிவிட்டுத் தண்ணீரும் குடித்தபின் பழையபடி சாய்வு நாற்காலியில் போய் உட்கார்ந்தவாறே மீண்டும் துங்க முயன்றாள் மோகினி. மறுபடியும் பேய்த் தாகம். மோகினி இரண்டாவது முறையாகவும் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்துபோய் தண்ணீர் கூஜாவைத் திறந்து அதிலிருந்த தண்ணீரையெல்லாம் பருகினாள். தீராத தாகம் மூண்டுவிட்டதுபோல் அடிவயிற்றில் வெப்பம் எழுந்தது. உலகையே மறந்து நிம்மதியாக உறங்கிவிட வேண்டும் போல ஒரே சோர்வு தள்ளாடித் தள்ளாடி நடந்துபோய் மறுபடியும் சாய்வுநாற்காலியில் சாய்ந்து ஏதோ நினைப்புடன் பக்கத்து மேஜையில் இருந்த கடித உறைகளை எடுக்கக் கை நீட்டியபோதுஅந்த உறைகள் கைக்கு எட்டாமல் மேஜை விளிம்பில் கைக்கெட்டுகிற மாதிரி இருந்த மாத்திரைப் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. நீட்டி எடுக்க முடியாமல் கைகள் அறவே சோர்ந்து கண்கள் இருண்டுவரவே நாற்காலியில் அப்படியே சாய்ந்து துங்கினாள் அவள். மறுபடியும் ஒரு தெய்வீகமான பிரமை வீணையும் கையுமாகக் கலைமகளே நேரில் வந்து, இன்னும் தாமதமேன் குழந்தாய் புறப்பட்டு வந்துவிடு' என்று அவசரமாக அழைப்பதுபோல் ஒரு தெய்வீகமான அழைப்பு அவள் காதில் கேட்டது. ஈரக் கூந்தலில் சொருகிய குடை மல்லிகை நன்றாக மணந்து அவள் நினைவில் இன்னும் பல்லாயிரம் மணங்களை நினைக்க வைத்தது. அந்த மனங்களின் நினைவில் மூழ்கி நித்தியமாகவும் சாசுவதமாகவும் அப்படியே விழியாமல் உறங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்று தோன்றியது மோகினிக்கு. அவள் உறங்கினாள். நிம்மதியாக இந்த உலகை மறந்து உறங்கினாள். இதன் சகலவிதமான ஆசாபாசங்களையும் நன்மை தீமைகளையும் சுகங்களையும் துக்கங்களையும் மறந்து உறங்கினாள். இந்த உலகில் பொழுது விடிந்து கொண்டிருந்தபோது அவள் தன்னைச் சுற்றி இருள் சூழ நன்றாக அநுபவித்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/674&oldid=595944" இலிருந்து மீள்விக்கப்பட்டது