பக்கம்:பொன் விலங்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பொன் விலங்கு

அவசியத்தையும் உணர்ந்தவனாகக் கீழே தாவி இறங்கி கைக்கு இசைவாக இருந்த அவள் வலது கையைப் பற்றிப் பின்னுக்கு இழுத்தான் சத்தியமூர்த்தி. அவன் அவசரமாகப் பாய்ந்து பற்றிய வேகத்தில் அந்தப் பூப்போன்ற கையை அழகு செய்து கொண்டிருந்த கண்ணாடி வளையல்களில் சில நொறுங்கின. பூக்களின் மென்மையைவிட அதிகமான மென்மையும் சந்தனத்தின் குளிர்ச்சியைவிட அதிகமான குளிர்ச்சியும் பொருந்திய அந்தக் கையில் உடைந்த வளைச் சில்லுகள் அழுத்தப் பெற்ற இடங்களில் கோடு கீறினாற் போலக் குருதி கொப்பளித்தது.

வாழ்க்கையின் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுபட்டுப் போவதற்குத் துணிந்துவிட்ட அந்தப் பெண் கடைசி விநாடியில் தன் துணிவையும் விருப்பத்தையும் பாழாக்கிவிட்ட அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். பிரத்யட்ச உலகில் ஓர் அபூர்வமாய்க் கவிகளின் கனவுகளிலே மிதக்கும் எல்லாவிதமான எழில்களும் ஒன்று சேர்ந்த இல்லாப் பேரழகைப் போன்ற அவளுடைய அந்தக் கண்களில் நீர் மல்கிற்று. புயல்காற்றில் அறுந்து விழுவதற்கு இருந்த பூங்கொடி தற்செயலாய்ப் பக்கத்துக் கிளையில் படர விட்டிருந்த ஏதோ ஒரு சிறிய நுனியின் பிணைப்பால் தப்பி இருப்பதைப்போல் அவள் அவன் பிடியில் இருந்தாள். உலகத் திலுள்ள நறுமணங்களில் மனத்தை மயக்கும் சக்திவாய்ந்த மணங்கள் எவை எவை எல்லாம் உண்டோ அவை அவை எல்லாம் ஒன்றாகி மணப்பதுபோல் மணங்களின் உருவமாகத் தன் பிடியில் சிக்கி நிற்கும் அவள் காதருகே குனிந்து சொன்னான் சத்தியமூர்த்தி. 'நல்ல வேளையாக நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள் இனி இப்படி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது."

'வாழ விரும்பாத அபலைகளையும் அநாதைகளையும் வலிந்து காப்பாற்றுகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை' என்று வெறுப்போடு பதில் சொல்லியபோது எந்தவிதமான ஆசைகளின் சாயலும் இல்லாமல் வறட்சியாகச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பைப் பார்த்த மறுகணமே அதன் உடனிகழ்ச்சியாகத் 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற் கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் என்று கவியரசர் பாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/68&oldid=595950" இலிருந்து மீள்விக்கப்பட்டது