பக்கம்:பொன் விலங்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பொன் விலங்கு

"இவர்களுக்கு எல்லாம் தேநீர் கொண்டு வா அம்மா' என்று தந்தை குரல் கொடுத்தபோது, 'நான் எதற்காக என் கைகளால் இவர்களுக்குத் தேநீர் கொடுக்க வேண்டும் -என்ற வெறுப்போடு வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்பினாள் பாரதி.

'முன் அறையில் கொண்டுபோய்க் கொடு. காலேஜ் ஆட்கள் யாரோ வந்திருக்காங்களாம்..." என்று வார்த்தைகளையும், ட்ரேயையும் வேண்டா வெறுப்பாக வேலைக்காரனிடம் கொடுத்தவளுக்கு அந்தத் தேநீரைக் குடிக்க இருப்பவர்கள் மேலெல்லாம் எதற்காகவோ கோபப்பட வேண்டும்போல் இருந்தது. வேலைக்காரனை முன் அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு வேலையும் ஓடாதபோது எந்த வேலையை எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகமே இன்றிச் செய்யப்படும் பரவசமான காரியமாய்த் தோட்டத்தின் பக்கமாக இறங்கிச் சென்றாள் அவள். நல்ல சிவப்புமில்லாமல் நல்ல வெளுப்புமில்லாமல் எப்படியிருந்தால் கண்களில் உறுத்தாமல் மென்மையாகத் தோன்ற முடியுமோ அப்படி நளினமாக சிவப்பு நிறத்தில் ரோஜாப்பூக்கள்ஆடிச்சிரித்துக்கொண்டிருந்தன. ரோஸ் என்ற நிறத்துக்கே இந்தப்பூவைப்பார்த்தபிறகுதான்இலட்சணமும்பெயரும் கிடைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதுவரை பெய்து கொண்டிருந்த மழை அப்போதுதான் நின்று போயிருந்த தனால் இலைகளிலும் பூக்களிலும் நீர் சிலிர்த்து நின்றது. பன்னீரில் குளித்துவிட்டு நிற்கும் கந்தர்வ லோகத்துக் குழந்தைகளின் முகங்களைப்போல் தோட்டத்துப் பூக்கள் அப்போது பொலிந்து கொண்டிருந்தன. பளீரென்ற வெளுப்புமில்லாமல் கண்ணைக் குத்தும் கருஞ்சிவப்புமில்லாமல் சாயங்கால வானத்தில் ரோஜாக் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் சில நிறங்களைப் போல ஒரு நிறத்தையே தனக்கு பெயராகப் படைத்துக் கொண்டு தன் நிறத்தால் ஒரு பூவுக்கு அழகாகி நிற்கும் அவற்றைப் புதிய கண்களுடன் அன்றுதான் அப்படிமுதன்முதலாகப் பார்க்கிறவள்போல் பார்த்தாள் பாரதி. அந்தப் பூக்களின் இளஞ் சிவப்பு நிறமும் சாயங்கால வானத்தில் தவழும் ரோஸ் மேகங்களும் நினைவு வந்த போது அவற்றின் தொடர்ச்சியாகச் சத்தியமூர்த்தியின் அழகிற் சிறந்த பாதங்களையும் நினைத்தாள் அவள். நினைத்தாள் என்று சொல்வதைவிடப் பொருத்தமாக வேறு விதத்தில் அதைச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/88&oldid=595983" இலிருந்து மீள்விக்கப்பட்டது