பக்கம்:பௌத்த தருமம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

பெளத்த தருமம்



பூத உடலை நீத்தார். எனவே, ஆசை, வெறுப்பு, அறியாமை ஆகிய பற்றியெரியும் நெருப்புக்கள் அவிந்து, மேலான பண்பாடுகள் யாவும் அமைந்து, உள்ளம் சமநிலையில் இன்பகரமாயுள்ள நிலையே நிருவாணம் என்று தெரிகின்றது, நிருவாண நிலையை அடையும் போது மனிதன் பூரண மெய்ஞ்ஞானமான போதியைப் பெறுகிறான். அந்த மெய்ஞ்ஞானம் ஸதி, தரும விசாரம், வீரியம், ஆனந்தம், மனனம், சமாதி, உபேட்சை என்ற ஏழு அங்கங்களுடையது என்பது முன்னரே விவரிக்கப் பெற்றுளது. பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்து, அருகத்து நிலையிலுள்ளவன் பூரணத்துவம் அடைவதையே நிருவாண நிலை எனலாம். இதற்கு மேலாக அவன் பெறவேண்டிய பக்குவமோ, பதமோ இல்லை. நிருவாண மடைந்தவன் மேலும் உலகில் வாழ்ந் திருந்தால், அவன் தாமரை இலை மேலுள்ள தண்ணீர் போல் விளங்குவான்; தன்னலமே யில்லாது அவன் பிறர்க்கு உரியவனாகவே யிருப்பான்.

துக்கத்தின் முடிவு

ஆகவே புத்த பகவர் துக்கத்தின் முடிவான இடம் என்று தமது உபதேசத்திலே குறிப்பிடுவது நிருவாணமே என்று தெரிகின்றது. அந்த உபதேசம் வருமாறு:

'நிலமும் நீரும் இல்லாத, ஒளியும் காற்றும் இல்லாத, எல்லையற்ற ஆகாயமும் (இடமும்) பிரக்ஞை உணர்வும் இல்லாத, வெறுமையும் (சூனியமும்) இல்லாத, அறிதலும் அறிதலற்றதும் இல்லாத, இந்த உலகம் அந்த உலகம் என்று இல்லாத, சூரியன் சந்திரன் இரண்டும் இல்லாத ஓர் இடம் (உலகம்) இருக்கின்றது. அதை வருதலும் போதலுமற்றது என்றும், நிற்றல், இயங்குதல், ஓய்வுறுதல், மரித்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/147&oldid=1386756" இலிருந்து மீள்விக்கப்பட்டது