பக்கம்:மணி பல்லவம் 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

569


இருந்தது. ஆலமுற்றத்துக் கோயில் மதிலுக்கும் அப்பால் கடல் நீல நிறத்துக் கோல எழிற் கொள்ளையாக எல்லையற்றுப் பரந்து தெரிந்தது. தோட்டத்தில் உலாவிக் கொண்டே தன்போக்கில் நிமிர்ந்த இளங் குமரன் முல்லை தன்னை நோக்கி வருவதைக் கண்டு திகைத்து நின்றான். மாலையில் படைக்கலச் சாலைக்கு வந்து தன்னைக் காண்பதாகத் தன்னிடம் நாளங் காடியில் வளநாடுடையார் கூறியிருந்தது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. புறப்படும் போது வளநாடுடையாரும் அவர் மகளும் சேர்ந்து புறப்பட்டு வந்திருக்க வேண்டுமென்றும், வளநாடுடையார் நீலநாக மறவரோடு பேசச் சென்றபின் முல்லை தனியாகத் தன்னைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்கு வருகிறாள் என்றும் இளங்குமரன் இப்போது புரிந்து கொண்டான். முல்லை தொலைவில் வரும் தோற்றத்தைக் கொண்டே அன்று அவள் அதிகமான சிரத்தையோடு தன்னை அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இளங்குமரன் அறிந்து கொள்ள முடிந்தது. எதிரே தன்னை நோக்கி அவள் ஒவ்வொரு முறை சிலம்பு ஒலிக்கும் பாதங்களைப் பெயர்த்து வைக்கும் போதும் அப்படிப் பாதம் பெயர்த்து மிதித்து நடக்கின்ற மண்ணின்மேல் ஒரு புதிய அழகை ஊன்றிக்கொண்டே நடந்து வருவதுபோல இருப்பதை இளங்குமரன் கண்டான். உடனே காரணமின்றியோ அல்லது காரணத்துடனோ அவனுக்கு விசாகையின் நடை நினைவுக்கு வந்தது. இந்த மண்ணில் ஊன்றி நடக்கமாட்டேன்’ என்பதுபோல் பிரவாகத்தில் மிதக்கும் பூவாக நடந்து வரும் விசாகையையும், இந்த மண்ணில் ஒவ்வோர் அடி பெயர்த்து வைக்கும்போதும் ஒரு புதிய அழகை ஊன்றிக் கொண்டு நடப்பதுபோல நடந்து வரும் முல்லையையும் ஒப்பிட்டு எண்ணி, அந்த எண்ணத்துக்கும், நிறுவைக்கும் மனத்துக்குள்ளிருந்து, கிடைக்கும் முடிவை அவன் பெறுவதற்குள்ளேயே முல்லை அவனுக்கு மிக அருகில் வந்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/119&oldid=1144508" இலிருந்து மீள்விக்கப்பட்டது