பக்கம்:மதன கல்யாணி-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233

சிவஞான முதலியார் சிறிது யோசனை செய்து, “இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் விவரங்களைப் பார்த்தால், பையன் தப்புவது அந்த பாலாம்பாளுடைய கையில் இருக்கிறது. அவளை நாம் சரிப்படுத்தி, பையனுக்கும் தனக்கும் சிநேகம் உண்டென்றும், அவனுக்கும் திருட்டுக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்றும் அவள் வாக்குமூலம் கொடுக்கும்படி நாம் செய்ய முடியுமானால், பையன் தப்பலாம். இல்லாவிட்டால், அவன் தப்பமுடியாதென்று நினைக்கிறேன். அவள் எப்படிப்பட்ட மனுவியோ? அவள் வேறே யாருக்காவது வைப்பாக இருப்பவளோ? நாம் சொல்வதை அவள் கேட்பாளோ மாட்டாளோ? சரி, வேறே வழி இல்லை. அவள் மூலமாகத்தான் தப்ப வழிசெய்ய வேண்டும். எல்லாவற்றிற் கும், நீங்கள் கையில் கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு புறப்படுங்கள். என்னுடைய பெட்டி வண்டி வாசலில் நிற்கிறது. நாம் இருவரும் உடனே ஆலந்துருக்குப் போய், அவன் நம்முடைய பையன் தானா என்பதை நிச்சயித்துக் கொண்டு அந்த பாலாம்பாளிடம் போய்ப் பேசிப் பார்ப்போம்” என்று கூற, அந்த யோசனையை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்ட கல்யாணி யம்மாள், “சரி; அப்படியே செய்வோம்; நான் இதோ வந்து விட்டேன்” என்று கூறிய வண்ணம் மிகவும் விரைவாக இரும்புப் பெட்டியண்டை ஓடி, அதைத் திறந்து, அதற்குள் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஒரு கற்றை நோட்டுகளை எடுத்துத் தனது மடியில் கட்டிக் கொண்டு, பெட்டியைப் பூட்டிவிட்டுத் திரும்பி வந்து “போகலாம் வாருங்கள்” என்றாள்.

உடனே சிவஞான முதலியார் எழுந்தார். இருவரும் நிரம்ப துரிதமாக நடந்து வெளியில் வந்தனர். கல்யாணியம்மாள் தான் ஒர் அவசர காரியமாக வெளியிற் போவதாகவும், வீட்டை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள்ளும்படியாகவும் பொன்னம்மாளிடம் கூறிவிட்டு, சிவஞான முதலியாரோடு பங்களாவிற்கு வெளியில் வந்தாள். அங்கே ஆயத்தமாக நின்று கொண்டிருந்த முதலியாரது பெட்டி வண்டியில் இருவரும் அமர்ந்து கொண்டு விசையாக ஆலந்துருக்கு ஒட்டும்படி உத்தரவு செய்ய, வண்டிக்காரன் சவுக்கை நன்றாக நீட்டி சடேரென்று இரண்டு அடிகள் கொடுக்க, குதிரை வாயுவேக மனோவேகமாகப் பறக்க ஆரம்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/251&oldid=649733" இலிருந்து மீள்விக்கப்பட்டது