பக்கம்:மதன கல்யாணி-1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மதன கல்யாணி

ஒர் உலகமாய்க் காணப்பட்டது. ஆதலால், வெளியூர்களில் இருந்து எவரும் அதற்குள் வருதலே அரிது. எப்போதாகிலும், போலீஸ் ஜெவான்கள் இருவர் மூவர் வந்தால் அவர்களது விஜயம் மகா ராஜர்களின் விஜயம் போலவே கொண்டாடப்படும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் கூடைகள், முறங்கள், கோழிகள், முட்டைகள், புறாக்கள் முதலிய பாதகாணிக்கைகள் சமர்ப்பிக்கப் படும். அவற்றைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சந்தோஷமாகத் திரும்பிப் போய்விடுவார்கள். அந்த மகா ஜனங்களின் உபயோகத் திற்காக அங்கு பிரத்தியேகமான ஒரு கள்ளுக்கடை இருந்தது. அதில் சாராயமும் சீமைச் சரக்குகளும் கூட விற்கப்பட்டு வந்தன. அதன் சொந்தக்காரனது பெயர் கந்தசாமி நாயக்கன். அவனும் கன்னியம்மாள் என்று பெயர் கொண்ட அவனது மனைவியும் அவ்விடத்தில் ஒரு பெருத்த வீட்டில் மேற்கூறப்பட்ட லாகிரி வஸ்துக்களை விற்றதன்றி, அந்த மகாஜனங்களுக்குத் தேவையான பல சரக்குகள் முறுக்கு, மசாலாவடை முதலிய சிற்றுண்டிகள் ஆகிய சகலமான பொருட்களையும் விற்று அதனால் பெருத்த பொருள் சம்பாதித்து வந்தனர். அன்றி, அந்தக் குறவர்களுள் பெரும்பாலோர் இராக்காலங்களில் கன்னக்களவு வழிப்பறி முதலிய இன்பகரமான தொழிலையும் செய்து வந்தனர் ஆதலால், அவர்களால் கொணரப்படும் திருட்டு சாமான்களுக்கு ஒன்றிற்குக் காற்பங்கு விலை கொடுத்து கந்தசாமி நாயக்கன் வாங்கிக் கொள்வது வழக்கம். எல்லா விஷயங்களிலும் கந்தசாமி நாயக்கன் அவ்வூர் மகா ஜனங்களுக்குக் காமதேனுவைப் போல மிகவும் அனுகூலமாக இருந்து வந்தான்.

இத்தகைய சிற்றுருக்கு அம்பட்டக் கருப்பாயி வந்து சேர்ந்தாள். அவள் அடிக்கடி அவ்வூருக்கு வரும் வழக்கம் உடையவள் ஆதலால், அவளைக் கண்ட ஜனங்களும் வியப்படையவில்லை. நாய்களும் வாயைத் திறவாமல் படுத்துக் கொண்டிருந்தன. அவள் மற்ற எந்த வீட்டிற்கும் போகாமல், நடுவில் இருந்த ஒட்டு வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். அதன் வெளிக்கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டிருந்தது. கருப்பாயி கதவண்டை போய் அதைத் தட்டினாள். உடனே “ஆர் அது?” என்று ஒரு பெண் பிள்ளையின் குரல் உட்புறத்திலிருந்து கேட்டது. “நான் தான் கருப்பாயி என்றாள் அம்பட்டச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/54&oldid=649938" இலிருந்து மீள்விக்கப்பட்டது