பக்கம்:மதன கல்யாணி-1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மதன கல்யாணி

நுழைந்து ஆண் குழந்தையை எடுத்து வந்து கொன்று எறிந்துவிட வேண்டும் என்று அவனுடம் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்தக் குறவனுக்கு அப்போது இருபது அல்லது இருபத்திரண்டு வயதிருக்கலாம். அவனது பெயர் கட்டையன் குறவன் என்பதாம். அவர்களிடம் பாதிப்பணம் அப்போது பெற்றுக் கொண்ட கட்டையன் குறவன் மாரமங்கலம் சென்று நாலைந்து நாட்கள் வரையில் பதுங்கி இருந்து அரண்மனையின் ரகசியங்களை எல்லாம் அறிந்து ஒருநாள் குழந்தைகள் மூவரையும் தாதிகள் அரண்மனைக்கு அடுத்த தோட்டத்தில் வைத்து விளையாட்டுக் காட்டியிருந்த சமயத்தில், உள்ளே புகுந்து வேலைக்காரிகளைத் தடியால் அடித்து வீழ்த்தி விட்டு ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். மூர்ச்சித்து வீழ்ந்து கிடந்த தாதிகள் ஒரு நாழிகைக்குப் பிறகு எழுந்து மூத்த குழந்தை காணாமல் போய் விட்டதைப் பற்றி பெருத்த ஆரவாரம் செய்து விஷயத்தை அரண்மனையில் தெரிவிக்க, ஜெமீந்தார் கல்யாணியம்மாள் குடிகள் ஆள்மாகாணங்கள் முதலிய சகலரும் விசனக்கடலில் மூழ்கினர். ஏராளமான ஆட்கள் எல்லாத் திசைகளிலும் சென்று எவ்விடத்திலாவது குழந்தை கிடக்கிறதோ என்று தேடி இரண்டு மூன்று நாட்கள் அலைந்து குழந்தையைக் காணாமல் திரும்பினர். மாரமங்கலம் அரண்மனையே துக்கமாகிய இருளில் ஆழ்ந்து விட்டது. கிழவரோ படுத்த படுக்கையாகி விட்டார். தாம் எண்ணிய எண்ணம் எல்லாம் ஒரு நொடியில் மண்ணாகிப் போனதைக் கண்டு கரைகடந்த துன்பமடைந்து புத்திர சோகத்தில் ஆழ்ந்து விட்டார். சின்னதுரையே அவ்வாறு சூழ்ச்சி செய்தவன் என்பது ஜெமீந்தார், கல்யாணி, பிறர் ஆகிய எல்லோருக்கும் சந்தேகமற விளங்கியது. அந்த நிலைமையில் தனது மனோதிடத்தை இழக்காதிருந்த கல்யாணி கிழவரைத் தேற்றி தான் உடனே சென்னைக்குப் போய் குழந்தை உயிரோடு இருக்கிறதா அல்லது கொல்லப்பட்டுப் போனதா என்பதை நிச்சயமாக அறிந்து வருவதாகச் சொல்லி அவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தேவையான தாதிகள் சிப்பந்திகள் முதலியோருடன் புறப்பட்டு மறுநாளே சென்னையை அடைந்து தமது பங்களாவில் இறங்கி மிகவும் ரகசியமான விசாரணை செய்யத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/64&oldid=649962" இலிருந்து மீள்விக்கப்பட்டது