பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

முத்தமிழ் மதுரை


தமிழ்ப்பாண்டியனின் தலைசிறந்த பெருநாடும் கடலுள் ஆழ்ந்து மறைந்தன. கடுங்கோன் அதைக்கண்டு கலங்கினான். வடக்கு நோக்கி வாடிய உள்ளத்துடனே வந்தான். ஒரு புதிய தலைநகரினை அமைத்துக்கொண்டு, பாண்டியப் பேரரசினை மீண்டும் நிலைநிறுத்தினான்.

கபாடபுரம்

கடுங்கோன் புதிதாக அமைத்துக்கொண்ட, இப் பாண்டியரின் கோநகருக்குக் ‘கபாடபுரம்’ என்பது பெயராயிருந்தது. கபாடபுரத்திலே தமிழ்ச் சங்கம் மீண்டும் தோன்றியது. 'இடைச்சங்கம்’ என்று ஆன்றோர் இதனைக் குறிப்பார்கள். வெண்தேர்ச்செழியன் முதலாக, முடத்திருமாறன் ஈறாக, நாற்பத்தொன்பது பாண்டிய அரசர்கள் இக் கபாடபுரத்திலே அரசு வீற்றிருந்தனர்.

வான்மீகி இராமாயணம் வடமொழியிலுள்ள மிகப் பழைமையான நூல்களுள் ஒன்றாகும். அதன்கண், கபாடபுரத்தைப் பற்றிச் சுக்கிரீவன் தென்திசை நோக்கிச் சென்ற அங்கதன் முதலான வானரவீரருக்குச் சொல்லுவதாக ஒரு குறிப்பு வருகிறது. “தென்புலத்திலே கபாடபுரம் இருக்கிறது. அதன் கோட்டைவாயிற் கதவுகள் பொன்னாலும் முத்தாலும் இழைத்து அழகுபடுத்தப் பெற்றிருக்கும்” என்று, சுக்கிரீவன் சொல்லுகிறான். கபாடபுரத்தின் செழுமையினை இந்தச் செய்தி நன்கு விளக்குவதாகும்.

தமிழுக்கே உரிய தனித்த சிறப்பினையுடைய பெருநூல் தொல்காப்பியப் பெருநூலாகும். இந்த நூல் இடைச் சங்கத்திலே விளங்கிய சிறப்புடையது. தொல்காப்பியம் எழுந்த கபாடபுரம் என்னும்போது, தமிழ் உள்ளவரை அதன் புகழும் நினைவும் நிலைத்திருக்கும் அன்றோ!

பாண்டிய நாட்டின் பெரும்பகுதியினை விழுங்கிய கடலுக்குப் பாண்டியரோடு எழுந்த பகைமை அத்துடன் தீர்ந்துவிடவில்லை. மீண்டும் அது பொங்கி எழுந்தது. கபாடபுரத்தையும் மற்றும் பல பகுதிகளையும் அது தன்னுட் கொண்டு தன் பசி தீர்ந்தது.

மணவூர்

அப்போது, முடத்திருமாறன் என்பவன் பாண்டிய மன்னனாக விளங்கினான். அவன் வடதிசை நோக்கி வந்து, சேர சோழர்க்குரிய சில நிலப்பகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் தன்