பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

முத்தமிழ் மதுரை



இந்த விசயனின் ஆட்சிகாலம் கி.மு. 483 முதல் 445 வரை என்கிறார்கள். இவன் காலத்தில் பாரதநாட்டின் பேரரசர்களாக விளங்கியவர்கள் பிம்பிசாரனும், அவன் மகனான அசாதசத்துருவும் ஆவார்கள். இதனையும் நாம் நினைவிற்கொள்ளல் வேண்டும். அப்போது, இவர்களின் ஆட்சிகாலத்திலும் மதுரை சிறப்புற்றிருந்ததென நாம் அறியலாம்.

புத்தரின் காலத்தில்

கெளதம புத்தர் அறநெறி பரப்பியவராக வாழ்ந்த காலத்தினைக் கி.மு. 563 முதல் 483 வரை என்கிறார்கள். முன்னர் நாம் கண்ட பல செய்திகளுடன் இந்தக் கால எல்லையையும் ஒப்பிட்டுக் கருதினால், ‘புத்தரின் காலத்திலேயும், போற்றுதற்குரிய பெருநகராக மதுரை விளங்கியிருத்தல் வேண்டும்’ என அறிந்து கொள்ளலாம்.

நந்தர்களின் காலத்தில்

சங்கத் தொகைநூற்களுள் அகநானூறு ஒன்று ஆகும். அதன்கண், வடநாட்டு நந்த மன்னர்களுள் சிறந்தோனாகிய மகா பதுமநந்தன் என்பவனின் செல்வ மேம்பாட்டைப் பற்றிய செய்தி காணப்பெறுகின்றது. இதனால், மதுரைப் பேரூர்க்கு, அன்று நந்தரைப் பற்றிய அறிவும் தொடர்பும் நிலவியது எனலாம். இதனால், நந்த மன்னர்கள் வடக்கே செங்கோல் நடாத்திய அந்நாளிலும், மதுரை, வளமலிந்த பேரூராகவே இருந்தது எனலாம்.

அலெக்சாந்தரின் காலத்தில்

அலெக்சாந்தர் கிரேக்கநாட்டிலே பிறந்த மாவீரர். இந்திய எல்லைவரையும் வந்து வெற்றி கொண்டவரும் இவர் ஆவார். இவர் கி.மு. 323-ல் இறந்தார்.

இவருக்குப் பின்னர் கிரேக்கர்களின் படைவலுச் சற்றே குறைந்தது. இவர் தளபதிகளுக்குள் ஒருவனான செலுயுகசு என்பவன் இந்தியப் பகுதிகளுக்கு உரியவனானான். இவனை வென்று, மீண்டும் வடக்கே பேரரசைக் கண்டவன் சந்திரகுப்த மெளரியன் என்னும் பேரரசன் ஆவான். இவன் காலம் கி.மு.322-298 ஆகும். இவன் காலத்திலே இவன் அவைக்குக் கிரேக்கத் தூதராக வந்தவர் ‘மெகஸ்தனிசு’ என்பவர். இவர் அந்நாளைய மதுரைப் பாண்டியரைப் பற்றி அவருடைய குறிப்புக்களிலே சிறப்பாக எழுதியுள்ளார். மேலும், ‘இந்தச் சந்திரகுப்த