பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

முத்தமிழ் மதுரை



7. சிவன் உவந்த மதுரை

மீனாட்சி கோயில்

மதுரைக்கண் புகழ்பெற்ற பெருங்கோயிலாக விளங்குவது, சொக்கநாதப் பெருமானின் திருக்கோயில் ஆகும். சொக்கநாதப் பெருமான், மலையத்துவச பாண்டியனின் திருமகளாகப் பிறந்திருந்த தடாதகைப் பிராட்டியாரான அம்மையை மணந்து கொண்டவர். இந்தத் திருமணத்திலே, அவர் பாண்டியனின் மருமகனும் ஆயினார். இதனால் மதுரைக்கோயிலை, ‘மீனாட்சியம்மன் கோயில்’ என்று உரிமையுடன் அழைத்துப் போற்றுகின்றனர். ‘மீனாட்சி’ என்பது, தடாதகைப் பிராட்டியாரின் பெயர்களுள் ஒன்று ஆகும்.

சிலம்பு குறிக்கும் கோயில்

இந்தக் கோயில் மிகவும் பழைமையானது. மதுரையிலே சிவபெருமானுக்குத் திருக்கோயில் நிலைபெற்றிருந்த சிறப்பினைச் சிலப்பதிகாரமும் உரைக்கின்றது. ‘அருந்தெறற் கடவுள் அகன்பெருங்கோயிலும்’ (சிலம்பு 13-137) எனவும், ‘நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்’ (சிலம்பு 14-7) எனவும், இக்கோயில் சிலம்பிலே கூறப்பெற்றிருப்பதனைக் காணலாம்.

‘அகன் பெருங் கோயில்’ என்ற சொற்கள், கோயிலின் பேரளவையும் நமக்கு ஒருவாறு புலப்படுத்துவதாகும். கோயில் பரந்த நிலப்பரப்பிலே அமைந்திருந்தது என்பதனை, ‘அகன்’ என்ற சொல் குறிப்பிடுகின்றது. கோயில் மிகவும் உயரமுடன் திகழ்ந்த தென்பதனைப் ‘பெருங்கோயில்’ என்ற சொல் விளக்குகின்றது.

அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கணைகுரல் ஒதையும் (சிலம்பு 13, 137-140)

என்று வருவனவற்றை நன்கு கவனித்தால், ஓர் உண்மை நமக்குத் தெளிவாகும். ‘மதுரையினிடத்தே, பாண்டியனுக்கு உரித்தான பெரும் புகழ்பெற்ற அரண்மனையினைப் போலவே, மதுரைக் கடவுளாக விளங்கிய சிவபெருமானுக்கும் அங்கே பெருங்கோயில் இருந்தது’ என்பதே அது. சிவபெருமானின்