பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

முத்தமிழ் மதுரை



சுந்தர பாண்டியம்

தொண்டை நாட்டின் ‘வாயிற்பதி’ என்னும் ஊரிலே, ‘அனதாரி’ என்றொரு புலவர் இருந்தார். அவர், "சுந்தர பாண்டியம்” என்றொரு நூலினை இயற்றினார். இதுவும் மதுரைச் சொக்கநாதரின் திருவிளையாடல்களை உரைப்பதே யாகும். வடமொழி நூலினைப் பின்பற்றிச் செய்யப்பட்டதே இதுவும். இதன்கண் காணப்பெறும் நகரப்படலம், மதுரையின் செழுமையினை மிக விரிவாகக் கூறுகிறது.

பரஞ்சோதி திருவிளையாடல்

திருவிளையாடல்கள் பலவற்றினும், தமிழ் நாட்டிற் பெரிதும் பரவலாகக் கற்கப்பட்டு வருவது, பரஞ்சோதி முனிவர் செய்யுள்நடையிற் செய்த நூலோயாகும். இது, ‘ஹாலாசிய மான்மியம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பாகச் செய்யப்பட்டது என்பர். சொற்சுவை மலிந்த, சிறந்த இலக்கிய நூலாகவும் இது திகழ்கின்றது.

திருவிளையாடற் பயகர மாலை

வீரபத்திரக் கம்பர், ‘திருவிளையாடற் பயகர மாலை’ என்றொரு செய்யுள் நூலைச் செய்துள்ளனர். இஃது ஒவ்வொரு திருவிளையாடலைப் பற்றியும் ஒவ்வொரு செய்யுளாகச் செய்யப்பெற்ற நூலாகும்.

‘இலீலா சங்கிரக அத்தியாயம்’ என்ற மற்றொரு நூலும், திருவிளையாடலைப்பற்றிய செய்யுள் நூல் ஆகும்.

இவ்வாறு, சிவபிரான் மதுரைநகரிலே நிகழ்த்திய திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூற்கள் பலவும், செய்திகளைச் சொல்லுகிற தன்மையிலே தமக்குள் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டனவாக விளங்குகின்றன. எனினும், அவற்றுள் காணப்படும் சில செய்திகள், நம் சிந்தனைக்கு உரியவைகளாகவும் விளங்குகின்றன. அவற்றை மட்டும் நாம் சிறிதளவு காண்போம்.

திருவிளையாடலிலே நகரைப்பற்றிய குறிப்புக்கள்

முதலில் நிலத்தை, அதன் அமைப்பை ஒட்டி, நான்காகப் பிரித்தார்கள் நம் முன்னோர்கள். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பவை. பின்னர், இந்தத்தன்மைகள் கெட்டுப் பாழாகிக் கிடந்த நிலத்தை ஒரு பிரிவாக்கிப் ‘பாலை’ என்றனர்.