பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

முத்தமிழ் மதுரை



வையைக் கரை

புதுப்புனல் மிளகையும், சந்தன மரங்களையும், அகில், தந்தம் முதலியவற்றையும் அடித்துக்கொண்டு வந்து கரையிலே வீசுவது, கைவண்மையுடைய பாண்டியனின் வற்றாத ஈகைச்செயலைப் போன்றதாகத் தோன்றுமாம்.

வையைத் துறை

நீராடுவோரின் முத்து மாலைகள், தலைக்கோலம் என்னும் அணிகள், மணி மாலைகள், குஞ்சங்கள் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வருகின்ற புதுப்புனல், துறையிடத்தே நீராடுவோருக்கு அவற்றை அணிவிப்பதுபோல வருமாம்.

வையைக்கரை வயல்கள்

நீர் பாய்ந்து நிறைந்தவான வயல்கள், வெள்ளத்தோடு வந்த விடுபூக்கள் பலவற்றையும் பெற்றுவிளங்கின. அந்தக் காட்சி, நடன அரங்கத்தை நீரும் பூவும் சிதறிப் புனைந்து அமைத்து வைத்திருப்பது போன்றிருந்ததாம்.

வையைக்கரைச் சோலை

வையைக் கரைச் சோலைகள் புதுப்புனலுக்கு விருந்தளித்து உபசரிப்பவைபோல, மலர்களையும் பூந்தாதுகளையும் உதிர்த்து விளங்கினவாம்.

இப்படியாக விளங்கிய, பழமதுரைப் பேரூரின் வையைப் புதுப்புனல் வருகையின் காட்சியினை எண்ணினால், நம் உள்ளம் அதன் சிறப்பினை ஒருபோதும் மறவாது எனலாம்.

2. திருப்பரங்குன்றம்

இடை வழி

பரங்குன்றத்திற்கும் மதுரைக்கும் இடையிலுள்ள வழியின் சிறப்பும் பரிபாடலில் கூறப்படுகிறது. ஏழும் ஐந்துமான துளைகளையுடைய புல்லாங் குழலினும் யாழினும் பிறந்த இசையொலியைப் போல, வண்டும் ஞிமிறும் இன்னொலி செய்து கொண்டிருக்கும். சுனைகளிற் பூக்கள் மலர்ந்திருக்கும், கொன்றையிற் பூக்கள் மாலைமாலையாகத் தொங்கும். கொடிப்பூக்கள் நறுமணத்தோடு மலர்ந்திருக்கும். மலர்ந்த காந்தளின் மணம் எங்கும் நிறைந்திருக்கும். இத்தகைய