பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

முத்தமிழ் மதுரை


உடைத்தாயிருக்கும். வாகைப்பூவைப் போன்ற கொண்டைகளுடனே விளங்கும் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். கொன்றைப் பூக்கள் சரஞ்சரமாகத் தொங்கிக்கொண்டிருக்கும். ‘புலி புலி’ என்று கண்டோர் அஞ்சும்படியாக, வேங்கை மரங்களிலே பூக்கள் மலிந்திருக்கும். காந்தள் மலர்கள் எங்கணும் பூத்துக் கவினுற நிறைந்திருக்கும்.

மேகங்கள் பரங்குன்றிற் கவிவது, முருகப் பெருமான் ஊர்ந்துவரும், பிணிமுகம் என்னும் களிற்றைப்போலத் தோன்றும். வானத்தே எழுகின்ற மின்னல், யானையின் நெற்றிப்பட்டத்தைப் போன்று ஒளியுடன் திகழும்.

பெருமானின் கோயிலிலேயுள்ள சித்திரசாலையானது, காமவேளின் படைக்கலக் கொட்டிலைப் போன்றிருக்கும். சோலைகளும் சுனைகளும், மலர்கள் செறிந்திருக்கக் காமவேளின் அம்புப் புட்டிலைப்போல விளங்கும். காந்தட் பூவின் குலைகள், போரிலே தோற்றுக் கட்டுண்டவரின் கைகளைப்போன்று காணப்படும். வானவில், அந்தக் காமன் ஏந்தியுள்ள வில்லைப் போன்றிருக்கும். மரங்களிலே விளங்கும் மலர்கள், அவன் எய்த கணையைப்போலக் காணப்படும். அருவிகள் ஒலியுடன் வீழ்வது, சிகரங்கள் முத்தாரங்களை அணிந்தாற்போன்று தோன்றும்.

மலர் செறிந்தன

பச்சிலையின் இளங்கொழுந்தும், ஆம்பற்பூவும், காந்தட்பூவும், பஞ்சாய்க்கோரையின் பூவும், நறவம் பூவும், கோங்க மலரும், இலவம் பூவும் ஆகிய இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்தனவாகத் தோன்றும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாகும். தெற்றின மாலைகளைப்போல மலர் நிறைந்தும், கோத்த மாலைகளைப்போல இடையிட்டும், தூக்கிக் கட்டின மாலைகளைப்போல நெருங்கியும், இவை எல்லாம் எம்மருங்கும் பூத்துக் கிடந்தன.

மேகம் முழக்கமிட, மயில்கள் தோகைகளை விரித்து ஆடின. தும்பிகள் குழலிசைப்பனபோல மலர்களில் வாய் வைத்து ஊதின. வண்டினங்கள் யாழிசைப்பன போல ஒலித்தன. அருவிநீர் தாளத்தோடுகூடிய முழவொலியினைப்போல முழக்கமிட்டது. இப்படியாக, நடன அரங்கம் ஒன்றும் அங்கே நலமுடன் விளங்கிற்று.