பக்கம்:ரமண மகரிஷி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

31




தமையன் பணத்தில் மூன்று ரூபாய் மட்டுமே தனது வழிச்செலவுக்காக எடுத்துக் கொண்டார். அருணாசலம் போக இந்தப் பணம் போதுமா? எப்படிப் போகவேண்டும்? எந்த வழியில் போக வேண்டும். எங்கே இருக்கிறது அந்தத் திருத்தலம்? என்ற விவரமெல்லாம் வெங்கட்ராமனுக்குத் தெரியாது! ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டிலே விடப்பட்டவனைப் போல அவர் நேராக, விர்ரென்று மதுரை இரயில்வே நிலையத்திற்குள் வந்தார்.

நேராகப் பயணச் சீட்டு வழங்கும் இடத்திற்குச் சென்று, தனது மூன்று ரூபாயில் மூன்றணாவை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, இரண்டு ரூபாய் பதின்மூன்றணாவுக்கு எவ்வளவு தூரம் ரயிலில் போக முடியுமோ, அவ்வளவு தொலைவிலே உள்ள திண்டிவனம் நகருக்குப் பயணச் சீட்டு பெற்றார்.

திண்டிவனம் எங்கே உள்ளது? அங்கிருந்து அருணாசலம் உள்ள திருவண்ணாமலை நகர் எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படிப் போக வேண்டும்? எங்கே போய் இறங்க வேண்டும் என்ற விவரமெலாம் அந்தப் பதினைந்து வயது சிறுவனுக்குத் தெரியாது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தெரிந்தவர்கள் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே என்ற உணர்வுகூட அவருக்கு உண்டாகவில்லை. மதுரை ரயில்வே நடை மேடைக்குப் புகைவண்டி வந்து நின்றது. வந்த வேகத்தோடு வெங்கட்ராமனும் வேகமாக ஏறி உட்கார்ந்து கொண்டான். அப்போது அந்தச் சிறுவனுக்கு அந்த அளவில்தான் விவரமும், உணர்ச்சியும் இருந்தது.

இரயில் பெட்டியிலே ஏறி உட்கார்ந்தாரோ இல்லையோ வெங்கட்ராமன், உடனே தியானத்தில் மூழ்கிவிட்டான். இரயில் புறப்பட்டது; வண்டி அசைவதையும், ஆடுவதையும், குலுங்குவதையும் கண்டு இது முதல் பயணமாக இருந்ததால் ஏதோ ஓர் அச்சம் ஏற்பட்டது அவனுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/33&oldid=1280307" இலிருந்து மீள்விக்கப்பட்டது