பக்கம்:ரமண மகரிஷி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. நடப்பது நடக்கும்

திருவண்ணாமலை குரு மூர்த்தத்திற்கு அருகே உள்ள நாயக்கருடைய மாந்தோப்பில் சென்றமர்ந்த ரமணரிஷிக்கு, நாயக்கர் இரண்டு உயரமான மேடைகளைக் கட்டிக் கொடுத்தார். அதே நேரத்தில் ரமணரைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளுக்குரிய பாதுகாப்புகளையும் வசதிகளையும் செய்து தந்தார்.

இந்த நிலை இவ்வாறிருக்க, வெங்கட்ராமன் என்ற மாணவன் திருச்சுழி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போமா?

‘கல்வியில் அக்கறை இல்லாதவர்களுக்கு வீட்டில் மட்டும் என்ன வேலை?’ என்று தனது தமையனார் கேட்ட கேள்வினால் அவமானம் தாளமுடியாமல் வெங்கட்ராமன் அண்ணனது வீட்டை விட்டுக் வெளியேறினான் அல்லவா? அந்தக் கோபத்தோடு வீட்டைத் துறந்தவன் மீண்டும் வீட்டுக்குள்ளேயே நுழையவில்லை.

எங்கே போகப் போகிறான் பயல்? ஊரைச் சுற்றிவிட்டு, நண்பர்களுடன் அலைந்து விட்டு மாலை வந்து விடுவான் என்று வெங்கட்ராமன் அன்னையாரும், அண்ணனாரும் அலட்சியமாய் இருந்து விட்டார்கள். ஆனால், மாலைப் பொழுது மளமளவென மாய்ந்து, அந்தி, அரும்பி அதுவும் அமாவாசை போல இருளைக் கவ்விக் கொண்டே இருந்தது. வெங்கட்ராமன் மட்டும் வரவில்லை. அண்ணன் திடுக்கிட்டார். எங்கெங்கோ ஓடி ஓடித் தேடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/64&oldid=1280788" இலிருந்து மீள்விக்கப்பட்டது