பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வல்லிக்கண்ணன்

தனி அழகுடன் குளுகுளுத்தது சூழ்நிலை கட்டிடங்களும் மரங்களும் பிறவும் ஒரு மோகன அழகுடன் காட்சி தந்து கொண்டிருந்தன. இரவைப் பகலாக்க முயலும் செயற்கை ஒளி இல்லை. இரவை இரவாகவே காட்சிப்படுத்தும் ஒளி தவழ்ந்து நின்றது. நெடுகிலும், வானம்கூட அற்புதமாகக் காட்சியளித்தது. செயற்கை ஒளிப்பெருக்கு இயற்கையின் எழிலை, இனிமையை மறைத்திருந்தது அவன் மனசில் பட்டது.

ஒளிப்பெருக்கு ஒர் அழகு என்றால், இருளின் நிறைவு தனி வசீகரம். இரவு இருட்டுமயமாகவே இருந்துவிடுவது இல்லை. இருட்டு குறைவான வெளிச்சம் என்கிறார் மகாகவி, இருள் ஒளிக்குப் பகையா? அல்லது ஒளியை எடுத்துக்காட்ட வாய்த்த துணையா? இரவு மோகனமானது. இரவிலும் ஒளி செய்கிற அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. வானத்தின் வெள்ளிகள். அமுத ஒளி பாய்ச்சும் குளுமையான நிலவு. இப்படிப் பல.

வெளிச்சமே வெளிச்சத்துக்குப் பகையாகிவிடுகிறது. நிலாவின் அமுதஒளி அழகை உணரவிடாதபடி விளக்குகள் தடையாக ஒளிர்கின்றன. நாகரிகப் பெரும் வெளிச்சங்களுக்குப் பழகிப் போன மனிதர்கள் நிலாவை, விண்மீன்களை, வானத்தின் ரகசியங்களைக் கானத் தவறிவிடுகிறார்கள். காண்பதற்கான மனமும் நாட்டமும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதனால் எத்தனையோ இனிமை களை இழந்துவிட்டார்கள். செயற்கை ஒளி வெள்ளம் மேவாத கிராமப்புறங்களில்கூட மக்கள் முன்காலங்களைப் போல் நிலாவின் இனிமையை ரசித்து அனுபவிக்கிறார்கள் என்று சொல்வதற் கில்லை. வாழ்க்கைப் பரபரப்பும் பிரச்சனைகளும் கவனங்களும் மிகுந்ததாக ஆகிவிட்டது பெரும்பாலோருக்கு.

நிலா முன்பு சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் களிப்பு அளிக்கும் களிப்பு ஆக இருந்தது. நிலாவில் அமர்ந்து கதைகள் பேசி உண்டு மகிழ்வதற்கு மக்களுக்கு முன்பு நேரம் இருந்தது. மனமும் இருந்தது. இளம்பெண்களும் சிறார்களும் வகைவகை யான விளையாட்டுகள் ஆடி மகிழ்வதற்கு நிலா துணைபுரிந்தது. உற்சாகம் அளித்தது. இக்காலத்தில் அத்தகைய விளையாட்டுகள் மறக்கப்பட்டுவிட்டன. சின்னஞ் சிறுசுகளுக்கு இனிய கதைகள் சொல்லி சந்தோஷப்படுத்துவதற்கு பெரியவர்களுக்கு நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. பலருக்குச் சுவையாகக் கதைகள் சொல்லக்கூடிய ஆற்றலும் இல்லை என்ற நிலைமை.

நகரத்தில் வசிப்பவர்கள் வானத்தைப்பார்க்க மறந்து போனார்கள். எண்ணற்ற சிறுவர் சிறுமியருக்கு நட்சத்திரங்கள், சந்திரன் முதலிய அற்புதங்களைக் கண்ணாரக் காணக்கூடிய வசதிகள் இல்லாமலே போயின வாழ்க்கையில், சூரிய உதயத்தையும்