பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 வல்லிக்கண்ணன் கதைகள்

'உங்களோடு நானும் வருவேன். உங்க கூடவே வருவேன்' என்று சிறுபிள்ளை மாதிரி, பிடிவாதக் குரலில் பேசினாள் அவள்.

'இதென்னடா இது! விளையாடுறியா பேபி?’ என்று திடுக்கிட்டுக் கேட்டான் கைலாசம். 'நான் எங்கோ போகிறேன். எப்படி எப்படியோ அலைவேன். நீயாவது என் கூட வருகிறதாவது!...' இன்னும் எவ்வளவோ சொல்லத் தவித்தான் அவன்.

"எங்கே போனாலும் சரி. நானும் உங்களோடு வருவேன். நீங்கள் இல்லாமல் இங்கு என்னால் இருக்க முடியாது’ என்று பேபி அடம் பிடித்தாள்.

'சரி. நான் எங்கும் போகலே; இங்கேயே இருந்துவிடுகிறேன்னு வை. அப்புறம்?

'நானும் இருப்பேன். உங்களோடு இங்கேயே இருந்து விடுகிறேனே?’ என்று ஆர்வமும் ஆசையும் துளும்பப் பதில் உரைத்தாள் குமரி. நீள் இமைகள் படபடத்த நெடுங் கண்களிலும் அவ்வுணர்வுகள் ததும்பி நின்றன.

'இதேதடா பெரிய வம்பாகப் போச்சு!’ என்று எண்ணிப் பெரு மூச்செறிந்தான் அவன். எனினும் உள்ளத்தில் மகிழ்வு பொங்கிக் கிளுகிளுப்பு உண்டாக்காமல் இல்லை.

"பேபி!' என்று பேச்செடுத்தான் அவன்.

‘என் பெயர் பத்மா. நீங்கள் என்னை பேபி என்று கூப்பிடக் கூடாது!’ என்று கட்டளையிட்டாள் அவள்.

அவள் தந்தையை ஏமாற்றுவது, நம்பிக்கைத் துரோகம் செய்வது, தன் மீது படியக் கூடிய குற்றம் பற்றி எல்லாம் லெக்சரடித்தான் கைலாசம். அவன் பெரும்பேச்சு எதுவும் அவள் திடமனசில் சிறு கீறல் கூட ஏற்படுத்தவில்லை.

அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போகாவிட்டால், நீங்கள் பிரயாணம் செய்கிற ரயிலிலேயே விழுந்து நான் செத்துப் போவேன். நிச்சயமாக அப்படித்தான் செய்வேன். தனியாக, வீட்டுக்குத் திரும்பவே மாட்டேன்' என்று, குரலில் உறுதி தொனிக்கப் பேசினாள் அவள்.

நிச்சயமாக அவள் அவ்வாறே செய்து முடிப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம் ஊசலிட்டது.

'உங்கள் மீது எனக்கு ஆசை. உங்களைப் பார்த்த தினத்திலிருந்தே உங்கள் மேல் எனக்கு ஆசை ஏற்பட்டு விட்டது' என்று உணர்ச்சி நிறைந்த குரலில் சொன்ன பேபி, அவன் அருகில் சென்றாள். அவன் தோள் மீது கைகளை இணைத்துத் தலையையும் சாய்த்தாள்.