பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113 வல்லிக்கண்ணன் கதைகள்

'அப்போ உன் அத்தான் அழகு என்று நீயே மகிழ்ந்து போகிறே; இல்லையாடி சீதை?’ என ஒரு வம்புக்காரி கிண்டல் பண்ணினாள்.

அவ்வேளையில் அவன் தற்செயலாக அங்கு வந்து விடவும், தோழிகள் கை கொட்டிச் சிரித்தார்கள். சீதையின் முகம் செக்கச் சிவந்து, தணிந்து சிரிப்பு சிரித்தது. 'சீதை கூட அழகாகத் தானிருக்கிறாள்' என்றது அவன் மனம்.

வேறொரு மாலை வேளையில், பொன் வெயில் சூழ்நிலைக்கு மினுமினுப்பு பூசிக் கொண்டிருந்தபோது, சீதை ஒரு தாம்பாளம் நிறைய அந்திமந்தாரைப் பூக்களைக் கொய்து திரும்பி வந்தாள். ஒரு இடத்தில் வெயில் தனது இனிய ஒளியை அவள் மீது பாய்ச்ச வசதி ஏற்பட்டது. மின்னும் தாம்பாளம் நிறையப் பளிச்சிடும் வண்ணப் பூக்கள் ஏந்தி வந்த பாவையும் அழுத்தமான நிறமுடைய பட்டுப் பாவாடையும் தாவணியுமே கட்டியிருந்தாள். அப்பொழுது அவளே அந்தியிலே பூதிதொளிரும் புஷ்பக்கொடி போல்தான் விளங்கினாள் அவன் நோக்கிலே மகிழ்வு பூத்த அவள் முகம் வனப்பு மிகுந்த பூச்செண்டாகக் காட்சிதந்தது. எனினும் சீதையிடம் அவனுக்கு அளவிலா ஆசை ஏற்பட்டு விடவில்லை.

காதல், காதல் என்கிறார்களே அந்த அற்புதம் ஒருவனுக்கு ஒருத்தி பேரில் ஏன் திடீரென்று ஏற்பட்டு அவன் உள்ளத்தையும், உணர்ச்சியையும் பாடாய்ப் படுத்துகிறது என்பதற்கு உரிய விளக்கத்தை எவரும் கண்டு பிடிக்கவில்லை. மகிழ்வண்ண நாதனுக்கு மட்டும் அது எப்படிப் புரியும்? ஆனால், சீதையின் தோற்றம் எப்பொழுது அவனைக் கவர்ச்சிக்கும் காந்தமாக மாறியது என்பதை அவன் நன்கு அறிவான். -

அவ்வூர்க் கோயிலில் வசந்த உற்சவத்தைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. புதிதாகப் பொறுப்பு ஏற்றிருந்த தருமகர்த்தா ஒரு 'மேன் ஆப் ஐடியாஸ்' பழைய திருவிழாவில் புதுமை புகுத்த ஆசைப்பட்டு அவர் நயமான வேலைகள் சில செய்திருந்தார். செய்குன்றுகள், செயற்கை அருவிகள், பூஞ்சோலை மின்விளக்குகள், உயர்ந்த ஒரு பீடத்தில் தவமிருக்கும் சிவபிரான் என்றெல்லாம் கலையாக அமைக்கப்பட்டன. சிவனின் தலையிலிருந்து செயற்கை நீரூற்று தண்ணிரை விசிறித் தெறித்தது. அதுதான் கங்கையாம்! .

இந்த அற்புதத்தைக் கண்டு களிக்க ஊரே திரண்டு சென்றது. பக்கத்து ஊர்களிலிருந்தும் படை படையாக ஜனங்கள் வந்தார்கள். மகிழ்வண்ணநாதனும், தனது நண்பன் ஒருவனுடன் வேடிக்கை பார்க்கச் சென்றிருந்தான்.