பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 வல்லிக்கண்ணன் கதைகள்

வேண்டும்; கதைப் புத்தகம் இருந்தால் கொடுங்களேன் என்று தொடங்கி, நாளடைவில் தொல்லையாகக் கூட மாறிவிடுவார்கள். இப்போது தெருவில் போய் வந்துகொண்டிருக்கிற ஒருவனோடு அவர்களாகவே எப்படி வலியப்பேச முடியும்? அல்லது, தெருவோடு போகிறவன்தான் தெரியாத பெண்களோடு திடுமென்று எப்படிப் பேச்சை ஆரம்பிக்க முடியும்? என்று சந்திரன் கருதினான்.

ஆகவே, புதுமை எதுவும் காணாமலே காலம் ஒடிக் கொண்டேயிருந்தது. காலம் இறக்கை கட்டிப் பறப்பதுபோல் ஓடியது.

மூன்று பெண்களில் யாரை அவன் காதலித்தான்?

தன்னைத்தான் என்று மூவரில் ஒவ்வொருத்திக்கும் தனித்தனியே எண்ணம் வளர்ந்தாலும் கூட மூன்று பேரும் சேர்ந்திருக்கும்போது - அவன் அவர்களைப் பார்த்தவாறே போவதைக் கவனிக்கையில் - இந்தச் சந்தேகம் இயல்பாகவே தலைதுாக்கியது அவர்கள் மத்தியில். இதற்கு விடை அவன் அன்றோ தரவேண்டும்? உண்மையில் சந்திரனுக்காவது உரிய விடை தெரியுமா?

தெரியும் என்று நிச்சயமாகச் சொல்லி விட முடியாது அவனால், அவனுக்கே அது சரியாகப் பிடிபடவில்லை இன்னும், ஒவ்வொரு வகையில் ஒவ்வொருத்தி சிறப்பானவளாகத் தோன்றினாள். சில சில காரணங்களால் ஒவ்வொருத்தி மீது விசேஷமான கவர்ச்சி தனக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. தனித்தனியாக நினைவு கூர்ந்தாலும், மூவரில் ஒவ்வொருத்தியும் அவனது மன அரங்கிலே பளிச்சென முன் வந்து நின்று, அவன் எண்ணமும் ஆசையும் தன்மீதே அதிகம் படிந்திருக்கின்றன என்று உறுதிப்படுத்த முயன்றாள். மூவரோடும் பேசிப் பழக வாய்ப்புகள் கிட்டியிருந்தால், அவனது ஆசைக்கொடி தனி ஒருத்தியைச் சுற்றிப் படர்ந்திருக்கக் கூடும். இப்போது அது மூன்று சிறு சிறு சுருள்களாகி ஒவ்வொருத்தியையும் தொட்டுப் பிடித்து ஒட்டிக் கொள்ள ஊசலாடிக் கொண்டிருந்தது.

மாதங்கள் வருஷங்களாக ஓடினாலும் அவர்கள் நட்பு இந்நிலையிலேயே தான் நின்றிருக்கும். சந்திரனின் சுபாவம் அப்படி. அவனுக்குச் சங்கோஜம் அதிகமிருந்ததோடு, காதல் பாதையில் தானாகவே முன்னேறுவதற்கு வேண்டிய துணிச்சலும், செயலூக்கமும் கிடையாது. அவனோடு கண்ணாமூச்சி ஆடிக் களித்த மூன்று பெண்களுக்கும் சங்கோஜம் இல்லை என்றாலும், நாமாக எப்படித் துணிவது என்ற தயக்கம் இருந்தது. அதனால் தேக்கமே நிலைபெற்றிருந்தது. -