பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரைக் காதலித்தான்? 145

இன்ட்டரஸ்டிங் கேரக்டர் போலிருக்கு!’ என்று தான் அவனால் எண்ண முடிந்தது.

சந்திரனுக்கு அம்மூன்று பெண்களுடன் - அல்லது, அவர்களில் ஒருத்தியுடனாவது - பேசிப் பழக வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதற்கு வேண்டிய மனத்தெம்பு இல்லை. அப்பெண்களும் அதே நிலையில் தான் இருந்தார்கள். அவர்களாகப் பேச்சுக் கொடுக்கட்டுமே என்று அவன் நாளோட்டினான். 'அவர் ஏன் பேசுவதில்லை? அவராகப் பேச ஆரம்பிக்கிறாரா இல்லையா, பார்ப்போமே!’ என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

இரண்டு கட்சியிலும் காணப்படாத துணிச்சலும், செயலூக்கமும் தோழி வனஜாவிடம் மிகுதியாக இருந்தன. அவன் பேசட்டுமே என்று அவள் காத்திருக்கவில்லை. பேசுவதற்குரிய வாய்ப்புக்களை அவளாக சிருஷ்டித்துக்கொள்ளத் தயங்கவுமில்லை.

பஸ் நிற்குமிடத்தில் அவள் நிற்கையில் அவன் எதிர்ப்பட்டால், எந்த நம்பரையாவது குறிப்பிட்டு, 'அது எப்படிப் போகும்?' என்று கேட்டாள். அல்லது இது இந்த இடத்துக்கு இன்ன வழியாகத்தானே போகிறது?’ என்ற மாதிரி எதையாவது விசாரித்தாள். தெருவில் வந்தால், 'தபால் வர நேரமாகுமோ? தபால்காரர் வருகிறாரா?' என்று எதையாவது கேட்பாள். இப்படி அவளாகவே ஆரம்பித்து, உற்சாகமூட்டி, அவனையும் பேசுகிறவனாக மாற்றிவிட்டாள். அப்புறம் அவர்கள் சேர்ந்து காணப்படலாயினர். ஒட்டல், சினிமா தியேட்டர், கடலோரம், பஸ் நிற்குமிடம் என்று பல இடங்களிலும்தான்!

அப்புறம் என்ன? சந்திரனுக்கு யாரைக் காதலிப்பது என்ற பிரச்னை எழ இடமே இல்லாமல் போய்விட்டது. வெறுமனே பார்ப்பதிலும், முகம் மலரப் புன்னகை புரிவதனாலும் காதல் வளர்ந்துவிடாது; காதல் கொடி வளர்ந்து மனோரம்மியமான புஷ்பங்களைப் பூத்துக் குலுக்குவதற்கு நாமும் முயற்சி எடுத்து, சிரத்தை காட்ட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவள் வனஜா. காதலை வளர்க்கும் கலை கைவரப் பெற்ற அவளே அதைக் கவனித்துக் கொண்டதால், அவனுக்குப் பொழுதெல்லாம் பொன்னாக மாறிவந்தது.

ஊரறியும் விஷயமாக வளர்ந்துவிட்ட ஒன்றும் அம்மூன்று பெண்களுக்கு மட்டும் தெரியாமல் போருமா என்ன? 'அவன் வஞ்சித்துவிட்டான். சரியான ஏமாற்றுக்காரன்... வனஜா சுத்த மோசம்...! என்று ஒவ்வொருத்தியும் எண்ணினாள். ஆனாலும், பெரியவனான ஜானகி தங்கை கலாவை கிண்டல் செய்வதில் தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்றாள். 'என்னடி கலா,