பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 வல்லிக்கண்ணன் கதைகள்

ஆசை காட்டியதும், மனிதத் தன்மையை காற்றிலே விட்டு விட்டு, பணத்தாசையோடு செயல்பட்டார்கள்...

இப்படி ஒன்றா, இரண்டா? 'புத்திக் கொள்முதல்' கணக்கில் வரவுகள் எத்தனை எத்தனையோ!

வருஷங்கள் ஓடின. கமலத்துக்கும் வயது அதிகரித்துத் கொண்டேயிருந்தது. அவளது புலப்பங்களும், பெருமூச்சுகளும் பெருகின. அவள் அம்மாக்காரியின் முணமுணப்புகளும் தொணதொணப்புகளும் அமைதியைக் குலைத்தன.

சிவசிதம்பரம்தான் என்ன செய்வார், பாவம்! ஊர் ஊராக அலைந்தார். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என்று எல்லாரிடமும் சொல்லி வைத்தார்.

எப்படியோ ஒர் இடம் சித்தித்தது. பேரங்கள், வாக்குறுதிகள் வெற்றிகரமாக முடிந்தன. நகைகள், ரொக்கப்பணம், மாப்பிள்ளைக்கு 'ஸூட்டு வகையறா', கல்யாணச் செலவு என்று பல ஆயிரம்கள் பணம் தாள்களாகப் பறந்து மறைந்தன.

கன்னி கமலம், மணமகள் வேடம் தாங்கி கல்யாண நாடகத்தில் சந்தோஷமாக நடித்து, திருமதி சந்திரசேகரன் என்ற பதவி ஏற்று, 'மாப்பிள்ளை வீடு' போய்ச் சேர்ந்தாள்.

'மணமகளே மருமகளே வாவா! - உன் வலது காலை எடுத்து வைத்து வாவா - குலமிருக்கும் குணம் இருக்கும் வாசல் எங்கள் வாசல்...' என்று ஒலி பெருக்கிகள் ஓலமிட்டு வரவேற்றதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

உரிய முறைப்படி பண்டபாத்திரங்கள், பலகார வகைகள் முதலிய சகல சீர்சிறப்புகளுடனும் அந்த வீட்டிலே கொண்டு கமலத்தை சேர்த்துவிட்டு வந்த சிவசிதம்பரம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார் என்றால், அது நியாயமேயாகும்.

அந்த நிம்மதி அல்பாயுசானது என்பதை உணரும் சக்தி பெண்ணைப் பெற்ற பெரியவருக்கு அவ்வேளையில் இல்லைதான்.

அவருக்கு "ஞானோதயம்' ஏற்படுவதற்கு வெகுகாலம் தேவைப்படவில்லை.

ரண்டு, மூன்று மாதங்களிலேயே, ‘குலமிருக்கும் குணமிருக்கும் வாசல் எங்கள் வாசல்' என்று பெருமை ஒலி பரப்பு பண்ணி, 'மருமகளே வா வா' என்று அழைத்த வீட்டில் குணக்கேடர்களே குடியிருந்தார்கள் என்பது புரிந்து விட்டது.