பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன்கொன்றை பூக்கும்போது... 171

"அதில்லே..."

"அதில்லேன்னா பின்னே எது இருக்கு?”

அவள் கேள்வி எனக்கு மேலும் சிரிப்பைத் தூண்டியது.

அவள் மூஞ்சியை உர்ரென்றாக்கிக்கொண்டு, "இப்ப என்ன சிரிப்பு வாழுது? முதல் சிரிப்புக்கே காரணம் சொல்லியாகலே இன்னும்!” என்றாள்.

"ஏ வாயாடி, இங்கே வா" என்றாள் அக்கா, வீட்டுப் பக்கம் நகர்ந்தவளாய்.

"நீ போ அக்கா... சரி, நீங்க சொல்லுங்க. ஏன் சிரிப்பு வந்தது?" என்று தங்கச்சி விசாரணையைத் தொடர்ந்தாள்.

"பாட்டும் பொருளும் ஒத்து வரலே! அதாவது, நீ ஏழை, உனக்குத் தெய்வம் சோறு தரணும்னுதானே ஆடுறே? ஏழை என்ற சொல்லின் எடுத்துக்காட்டு நீதான் என்றால், உலகத்தில் உன் போன்ற ஏழைகள் நிறைய நிறைய இருக்கலாமே என்று தோன்றியது...”

நான் ஒரு சிறு பெண்ணிடம் 'புத்தகத்தனமாய்' பேசுகின்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. என் பேச்சு நின்று விட்டது.

"வவ்வவ்வே!" என்று கீழ் உதட்டை மடித்து, பல்லால் கடித்து, 'வலிப்பு காட்டி'னாள் அவள்.

"ஏட்டி என்ன கொழுப்பு? இங்கே வா!" என்று அதட்டிய அக்காள். என் பக்கம் பகைமைப் பார்வை எறிந்துவிட்டு வீடு விடென்று நடந்தாள்.

'அந்த வீட்டில் இதுபோல் இன்னும் எத்தனை குரங்குகள் வந்திருக்கின்றனவோ தெரியவில்லை!' என்று நான் எண்ணிக் கொண்டேன்.

அப்படி அதிகமாக ஒன்றுமில்லை என்று பின்னர் தெரிந்தது. அந்தச் சிறு பெண், அவள் அக்காள், அம்மா, தாத்தா ஒருவர், ஒரு வேலைக்காரி. அப்பா டவுனில் இருக்கிறார். இவர்கள் வருஷத்துக்கு ஒரு முறை இங்கு வந்து, இரண்டு மூன்று மாதங்கள் தங்கிவிட்டுப் போவார்கள். அப்பா எப்பவாவது வந்தாலும் வருவார்; வராமலும் இருப்பார். தாத்தாதான் அடிக்கடி இந்த ஊருக்கு வந்து போவார். இதெல்லாம் அந்தப் பெண் மூலம் பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள்.

அவளுக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயசிருக்கும். இந்த வயசுப் பெண்கள் எந்த ஊரில் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, ரொம்பவும் 'இன்ட்டரஸ்டிங்' கான