பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 வல்லிக்கண்ணன் கதைகள்

அப்படிச் சுற்றி வந்தபோது தான் ரஞ்சிதம் அவன் பார்வையில பட்டாள். 'இப்படி தெருத் தெருவாக ஆடி அலைக்கழிவதை விட, ஜம்னு நாடகமேடையில் நடிக்கலாமே. அதனால் பெயரும் புகழும் வரும். பணமும் அதிகம் கிடைக்கும். சுகமாக வாழவும் முடியும்' என்று ராஜப்பா ஆசைப்பேச்சுகள் பேசினான்.

ரஞ்சிதம் அவனாலும் அவன் பேச்சுக்களாலும், மேடைக் கவர்ச்சியினாலும் வசீகரிக்கப்பட்டாள்.

'ஸ்பெஷல் டிராமாக்களிலே ஜொலிக்குதே ஒரு சிவத்தப் புள்ளை, அதுக்கு இந்த ஊருதான்’ என்று ஊருக்கு விளம்பரமும் தேடித்தந்தாள்.

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

திடீரென்று நாடகமேடை ஜோதி ஸ்பெஷல் டிராமா உலகிலிருந்து அஸ்தமித்து விட்டது.

'அந்தச் சிவத்தப்புள்ளை சினிமாவிலே நடிக்கப் போயிருக்கு தாம்' என்று பேச்சு எழுந்தது.

'அடி சக்கைன்னானாம்!' என ஆரவாரித்தார்கள் அந்த வட்டாரத்தினர்.

'சவம் கெட்டுக்குட்டிச் சுவராகப் போகுது. பின்னே அங்கே போயி உருப்படவா போகுது அது?’ என்று கரித்துக் கொட்டினான் ராஜப்பா.

'கிளி தன் கையைவிட்டுப் பறந்து போயிட்டுதே என்கிற வயித்தெரிச்சலில் இவன் இப்படிப் புலம்புதான்' என்று அவனை விமரிசித்தார்கள் மற்றவர்கள்.

சினிமா உலகத்தைச் சேர்ந்த நபர்; 'புதுமுகம்' களை தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு ஆசாமி அந்தப் பக்கம் வந்தான். தடபுடல் லாட்ஜ் ஒன்றில் தங்கினான். யார்யாரையோ பார்த்தான். சிவத்தப்புள்ளை ரஞ்சிதம் பற்றி யாரோ அவன் காதில் கிசுகிசுத்தார்கள். அவளை பேட்டிகாண ஏற்பாடு செய்தார்கள்.

அவள் வந்தாள். பார்த்தாள். சிரித்தாள்.

மிஸ்டர் சினிமாவாலா கிறக்கமுற்றார். அப்புறம் என்ன? அவரும் அவளும் முதல் வகுப்பு வண்டியில் பிரயாணமானார்கள், சினிமாபுரியை நோக்கி.

புதிய படங்கள் வேகம் வேகமாக வந்தன.