பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் தேற மருந்து 209

விநாயகம் எதையோ எண்ணிக் கொண்டவராய்ச் சிரித்தார். 'வழியிலே இரண்டு பெண்களைப் பார்த்தேன். நாகரிகங்கள். ரொம்ப ஸ்டைல். நவயுக ஸ்டைல்கள் தலைமுடியை எப்படியோ சிங்காரித்துக் கொள்வதிலும், இடுப்புச் சேலையை ரொம்பவும் இறக்கிக் கட்டிக் கொள்வதிலும்தான் விளம்பரமாகுது. இந்த அக்காளுகளும் அதே தினுசுதான். அவள்களை பார்க்கையில் எனக்கு வேறொரு பெண்ணின் நினைப்பு வந்தது. நேற்று பஸ் நிலையத்தில் பார்த்தேன். எளிய தோற்றம். அதுவே தனி அழகாகத் தோணிச்சு. சில பெண்களைப் பார்க்கையிலே மனசில் ஏதேதோ எண்ணங்கள் தலை தூக்கும். ஆனா சில பெண்களைப் பார்க்கையில் தவறான எண்ணம் எழாது. இந்தப் பெண்ணும் அப்படித்தான் இருந்தாள். புனிதம், தூய்மை, அமைதியான அழகு. அதுபோன்ற பெண் ஒருத்தியைப் பார்த்து தான் ரவிவர்மா லட்சுமி சரஸ்வதி திருஉருவங்களை ஒவியமாக்கியிருப்பான் என்ற நினைப்பு எனக்கு எழுந்தது'...

விநாயகம் பெண்கள் பற்றித் தொடர்ந்து பேசினார். சுவையாகவும், கிண்டலாகவும பலப்பல சொன்னார். அப்புறம் குழந்தைகள் பற்றி, அவற்றின் இயல்புகள், சிரிப்பு, அழகு அம்சங்கள், விளையாட்டுப் போக்குகள் பற்றி எல்லாம் பேசினார். இயற்கை வளங்கள் பற்றி திரும்பவும் சொன்னார். மனித உழைப்பினால் மலர்ந்த நலன்கள், சிறப்புகள் பற்றியும் ஈடுபாட்டுடன் பேசினார்.

‘வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்கள்! வாழ்க்கையே அற்புதமானதுதான். அவற்றை நம்மவங்க உணர்வதில்லை. உணர விரும்புவதுமில்லை. நாகரிக வசதிகள், வேலைச் சுமைகள், பொறுப்புகள், கவலைகள் என்று மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே ஏகப்பட்ட விலங்குகளை மாட்டிக் கொண்டு குமைகிறார்கள். அவையும் தேவைதான். அதற்காகத் தன்னைச் சுற்றியுள்ள இனிமைகளைக் கவனிக்கப்படாது, ரசித்து மகிழக் கூடாது என்கிற கண்டிப்பு, கட்டுப்பாடு எதுவும் இல்லையே! நாகரிக விளக்கொளியில் அறைக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்ளும் பட்டனவாசிகள், வெளியே அற்புத ஒளிப்பிரவாகமாய் நிறைந்து கிடக்கும் நிலாவைக் கண்டுகளிக்க மறந்து போகிறார்கள், ரசிக்கத் தவறிவிடுகிறார்கள் என்று யாரோ ஒரு கவிஞர் சொல்லியிருப்பதாக நீதானேடே சொன்னே? பின்னே என்ன!' என்றார்.

'சரி, நான் வாறேன். ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்திட் டேன்' என்று சொல்லி எழுந்தார். வந்தது போலவே வேகமாய்ப் போய் மறைந்தார். -