பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 வல்லிக்கண்ணன் கதைகள்

வீதியில் போகிறபோதே, 'ஐயா, உம்மைத் தானே! யோவ்!’ என்று பரமசிவம் உரக்கக் கூவுவார். முன்னே, துரத்தில் வேகமாகப்போய்க் கொண்டிருப்பவர்கள் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். சிலர் நின்று கவனிப்பார்கள். பரமசிவம், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல், சாதுவாகத் தன் வழியே நடப்பார்.

இவ்விதமான சிறு குறும்புகளை எல்லாம் பார்த்து ரசிக்கவும், வியந்து பாராட்டவும் அவருகில் யாரேனும் ஆட்கள் இருந்தால் தான் பரமசிவம் செய்வார். மற்றவர்கள் பாராட்டி விட்டால் அவருக்கு ஏகப்பட்ட குவி. மேலும் விஷமங்கள் செய்வதில் உற்சாகம் காட்டுவார்.

ஒரு தடவை ஒரு வீட்டுக்கு தந்தி வந்தது. அவ்வீட்டின் தலைவர் எங்கோ போயிருந்தார். தந்தி என்றாலே வீண் கலவரமும் பீதியும் கொள்கிற இயல்பு மக்களிடம் இருக்கத்தானே செய்கிறது? தந்தி விஷயத்தைப் படித்து அறியத் தவித்தார்கள் அவ்வீட்டுப் பெண்கள். வழியோடு போன பரமசிவத்திடம் காட்டினார்கள். அவர் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, 'அம்மாவுக்கு ஆபத்து. உடனே புறப்பட்டு வரவும் என்று செய்தி வந்திருக்குது' என்றார். அவ்வளவுதான். அந்த வீட்டில் ஒப்பாரியும் ஒலமும் பொங்கி எழுந்தன. பரமசிவம் அங்கே ஏன் நிற்கிறார்? திரும்பிப் பாராமல் வேகநடை நடந்து வேறொரு தெருவில் புகுந்து மறைந்தார்.

வீட்டுத் தலைவர் வந்து, அழுகையையும் ஒப்பாரியையும் கண்டு, விஷயம் புரியாமல் திகைத்து, தந்தியைப்படித்து விட்டு, 'அட மடச்சாம்பிராணிகளா! அம்மா புறப்பட்டு வருகிறாள், ஸ்டேஷனுக்கு வந்து சந்திக்கவும்னு தந்தி வந்திருக்கு இதுக்குப் போயி, ஒ ராமான்னு அழுது புலம்புவானேன்?' என்று கண்டித்தார்.

'அந்தத் தடிமாடன் பின்னே அப்படிச் சொன்னானே?" என்றாள் ஒருத்தி. 'அவன் பாடை குலைய! அவனுக்கு இங்கிலிசு தெரியாதோ என்னமோ என்றாள் வேறொருத்தி. ‘தெரியாதுன்னு சொல்லாமல், இப்படி ஏன் புளுகனும்? அவன் நாசமாப் போக’ என்று பலவிதமாக ஏசிப்பேசினார்கள் பெண்கள்.

பரமசிவம் பத்தாவது படித்துப் பாஸ் பண்ணியவர்; அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? அவர்கள் இவ்வாறெல்லாம் ஏசித்துப்புகிறார்கள் என்பது பரமசிவத்துக்கு தெரிய வழி உண்டோ? அதுவும் கிடையாது.