பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242 வல்லிக்கண்ணன் கதைகள்

ஒரு வியாழ வட்டம் கழித்துத் தான் இங்கே வர முடிஞ்சிருக்கு இதை சரி பார்த்துக் கொள்ள ஏற்ற தருணம் தான்' என்று அவர் எண்ணிக் கொண்டார்.

அவ்வூரில் பிரமாத மாறுதல்கள் எவையும் புகுந்துவிட வில்லை. தெருக்களில் மின்சார விளக்குகளும், குடிநீர் குழாய்களும் புதிதாகச் சேர்ந்திருந்தன. மற்றப்படி குட்டிச் சுவர்கள், இடிந்து கொண்டிருக்கும் சிறு வீடுகள், பழுது பார்க்கப்படாத பெரிய வீடுகள். கட்டை மண்ணை வேலிகளாகக் கொண்ட வெறும் தோட்டங்கள் எல்லாம் 'பழைய கறுப்பனே கறுப்பன் என்ற நிலையில் தான் காட்சி தந்தன. மனிதர்களில் சிலர் செத்துப் போயிருந்தார்கள். சிலர் பிழைப்புத் தேடி வெளியூர் போய் விட்டார்கள். வறுமையும் முதுமையும் நோயும் ஊரோடு இருந்தவர்களின் உடலையும் உள்ளத்தையும் வெகுவாக பாதித்திருந்தன. முன்பு சின்னப்பிள்ளைகளாகத் திரிந்தவர்கள் இப்போது பெரியவர்கள் ஆகியிருந்தார்கள். ஆனாலும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் நிறையவே தெருக்களில் தென்பட்டன.

ஓடிய காலம் கனகசபையின் உடலில் பாதிப்புகளைப் பதித்திருந்தது. வயது முதிர்வும், சில பகுதிகளில் அதிகமான அநாவசியமான - சதையும், தலையில் வழுக்கையும் தோன்றியிருந்தன. வாழ்க்கையின் சுமைகள் அவரை வெகுவாக அழுத்திக்கொண்டிருந்ததால், அவரே உற்சாகமற்று, வயசுக்கு மீறிய கிழத்தனம் பெற்று, சோர்வுடன் தோற்றம் அளித்தார். எனினும், 'வராது வந்த' நண்பரை மனநிறைவோடும் முகமலர்ச்சியோடும் வரவேற்று உபசரித்தார்.

அவர்கள் ஓயாது பேசிக் கொண்டேயிருந்தார்கள். எல்லாரையும், எல்லா விஷயங்களையும் பற்றித்தான்.

நடராஜனை சந்தித்தது பற்றி ஞானப்பிரகாசம் சொன்னார்.

'ஆமாம். கெட்டிக்காரப் பையன். அவனுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். படிப்பில் ஆர்வம் உள்ள, திறமையும் அறிவுக் கூர்மையும் உள்ள பையனுக்கு மேற்கொண்டு படிக்க வசதி இல்லை, அவன் கிளார்க் வேலைக்குப்போக வேண்டிய தாச்சு, நம்ம சமூக நிலைமை அப்படித் தானிருக்கு, அவனைப்போல எத்தனையோ பேர். இவனாவது ஏதோ பிரைவேட் கம்பெனியில் குமாஸ்தாவாகப் போயிருக்கான். அங்கே சுயமுயற்சிகளுக்கும் தன்முனைப்புக்கும் ஏதாவது வழிவகை தென்படலாம். எனக்குத் தெரிந்த ஒரு பிரைட் ஸ்டுடன்ட். நல்ல அறிவாளி. ரொம்பவும் முன்னுக்கு வந்திருக்க வேண்டியவன். ஆனால் வாய்ப்புகள்