பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் அதிர்ச்சி 255

வேண்டும், எவ்வாறெல்லாம் பழகலாம் என்று எண்ணுவதிலேயே பொழுது இனிமையாக ஓடியது.

இன்று இன்ன கிழமை, வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இத்தனை நாள் - ஒவ்வொரு நாளும் இப்படி அநேக தடவைகள் அவன் கணக்கிட்டு வந்தான்.

வியாழனும் பிறந்தது. வளர்ந்து ஒடிக்கொண்டிருந்தது. வியாழக்கிழமை மாலை ஆறுமணி. இரண்டு பேர் சந்திரனின் டாக்சியில் ஏறினார்கள். உல்லாச புருஷர்கள். அவர்களது உடையும், நடையும், வாசனையும், பேச்சும் இதை விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தன.

'நேற்று அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயிருந்தேன். உங்களைப் பற்றி விசாரிச்சுது. எங்கே அவரு வரவே காணோமின்னு கேட்டுது' என்று ஒருவன் - ஒல்லியான ஆசாமி - சொன்னான்.

பருமனும் பணமெருகும் படாடோபமும் மிகுதியாகப் பெற்றிருந்தவன், மகிழ்ச்சி பல்லில் படர, 'அப்படியா? இந்து இப்போ எப்படியிருக்குது?’ என்றான்.

'அதுக்கு என்ன? லட்டு இல்லே!'

'ஊங் ஊம்ங்' என்று கனைத்தான் தடியன்.

'அது நாடகங்களிலே எல்லாம் நடிக்குது. இந்த மாதக் கடைசியில் கூட ஏதோ டிராமா இருக்குதாம். நீங்க அவசியம் பார்க்கணும்னு ஆசைப்படுது...'

'நல்ல புள்ளெதான்! என்று தடித்த உதடுகளை நாக்கினால் தடவிக் கொண்டான் பெரியவன்.

ஒல்லி நபர் 'இப்படி இப்படிப் போ' என்று வழி கூறிக் கொண்டும், சுவையாகப் பேசியும் பசையுள்ள நண்பனை உற்சாகப்படுத்தி வந்தான்.

ஒரு இடத்தைக் கடந்தபோது, 'இந்திரா இரண்டு தடவைகளும் இங்கேதான் இறங்கிக் கொண்டாள்' என்று நினைவு படுத்தியது சந்திரன் மனம்.

அருகே உள்ள சிறு தெருவில் சென்று, பக்கத்துச் சந்தில் புகுந்தது டாக்சி.

நிறுத்து, நிறுத்து! இந்த விடு தான்.'

'சடக்'கென வண்டியை நிறுத்தினான் சந்திரன்.