பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றங்கரை மோகினி 285

அந்தக் கணத்தில் மகாதேவனுக்குப் புதிர் விடுபட்டு உண்மை புலனாயிற்று. இவள் பைத்தியக் கோளாறு உடையவள். வெறித்தனம் தான் இவளுள் பதுங்கியிருந்து இவளை விசித்திரமாகவும், விநோதமாகவும், பேதையாகவும் நடந்து கொள்ளும்படிச் செய்திருக்கிறது. இப்போது அதனுடைய முழு வேகமும் வேலை செய்கிறது.

இதைப் புரிநது கொண்டதும், இந்தச் சனியனிடமிருந்து நழுவித் தப்புவிக்க வேண்டுமே, அதற்கு வழி ஏதேனும் தென்படுகிறதா என்று கவனிக்கலானான்.

அவள் மீண்டும் அவனை நெருங்கி, அவன் கையைப்பற்றி வெடுக்கென்று கடித்துவிட்டு, பலத்த குரலெடுத்துச் சிரித்தாள். "மாட்டிக்கொண்டாயா? என்னை ஏமாற்றவா பார்த்தே?” என்று கத்தினாள். அவன் வேதனையும் ஆத்திரமும் உந்த, ஓங்கி ஒரு அறை கொடுத்தான் அவன் கன்னத்தில்.

"ஐயோ அப்பா, என்னை கொல்றானே!" என்று கதறிவாறே, தலையில் கை வைத்து கொண்டு அவள் கீழே உட்கார்ந்து விட்டாள்.

"டேய், யார்ரா அவன்?... பிடி, விடாதே!” என்று கூச்ச லிட்டபடி மூன்று பேர் ஒடி வந்தார்கள். படகிலிருந்து அப்பொழுதுதான் அவர்கள் இறங்கியிருந்தார்கள். ராஜம் கதறி ஒலமிடாவிட்டால்கூட, அவ்விருவரும் இருந்த இடத்துக்குத் தான் அவர்கள் வந்திருப்பார்கள். அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு வந்த நபர்கள்தான் அவர்கள்.

வந்தவர்கள் நிதானம் அடைந்தார்கள். "என்ன நடந்தது? அவள் ஏன் அப்படி அலறினாள்?" என்று ஒருவர் கேட்டார்.

"இயல்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று வெறி பிடித்தவள்போல் நடந்து கொண்டாள். என் கையைக் கடித்து, கழுத்தை நெரித்தாள். அவள் பிடியை விலக்குவதற்காக நான் ஓங்கி அறைந்தேன். அதனால்தான் அப்படிக் கத்தினாள்" என்று அவன் சொன்னான். "கடவுளே, என் பேச்சை இவர்கள் நம்பவேண்டுமே” என்று அவன் உள்ளம் பிரார்த்தனை பண்ணியது. -

அவர்கள் நம்பினார்கள். அந்தப் பெண்ணின் கோளாறு அவர்களுக்குத் தெரியும். "அது சரி. நல்லா இருக்கிற பெண்ணுக்கு திடீர் திடீர்னு மூளைக் குழப்பம் ஏற்பட்டு விடுது. இப்படி விபரீதமாக நடந்து கொள்கிறாள்" என்று ஒருவர் சொன்னார்.