பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிர்ச்சி 273

முகத்தேற்றமும் அவர் கண்ணுக்குள்ளேயே நின்றன. மனசில் ஆழப்பதிந்து விட்டன. அந்த பயங்கரம் அடிக்கடி பூச்சாண்டி காட்டியது. அத்துடன் போலீஸ் வந்து தன்னைப் பிடித்து மிரட்டக்கூடும் என்று பயம் வேறு. அதனாலே இதை யாரிடமும் அவர் சொல்லவில்லை; சொல்ல விரும்ப வில்லை. அதுவே மனசைக் குடைந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் பயங்கரக் கனவாய் வந்து அவரை அலறச் செய்தது...

அவர் சொல்லச் சொல்ல மற்றவர்கள் கிலிபிடித்தவர்களாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். என்ன சொல்வது என்றே அவர்களுக்கு விளங்க வில்லை.

('அமுதசுரபி - 1994)



மனநிலை


வன் - பெருமாள். சாதாரண மனிதன்.

அவ்வேளையில் அசாதாரணமான சூழ்நிலையில் தனித்து விடப்பட்டிருந்தான்.

அதனாலேயே அவன் உள்ளம், இனம்புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளினால் கனமேறிக் கொண்டிருந்தது. ஒருவித பயம், குழப்பம், அழுத்தும் சோகம், ஏதோ ஒரு வேதனை கவிந்து, கணத்துக்குக் கணம் பாரமாகி வந்தன.

அவன் பார்வை ஒரு மிரட்சியுடன், மேலும் கீழும்; அங்கும் இங்கும், ஏறி இறங்கிப் புரண்டு அலைபாய்ந்தது. அவன் கண்களில் பட்டனவெல்லாம் அவனை அச்சுறுத்தின.

மலைகள். எல்லாப் பக்கங்களிலும் மலைப்பகுதிகள். விரிந்து பரந்து கிடந்தன. ஓங்கி நிமிர்ந்து நின்றன. முண்டும் முடிச்சுமாய் முகடுகள் தொங்குவனபோல் தென்பட்டன. ஒருபுறம் விண்ணைத் தொடமுயலும் உயர் சுவர் வளைந்து நெளிந்து சென்றது, பாதை சற்றுத் தள்ளி சரிவாக இறங்கிக் கிடந்தது மலை. அதை ஒட்டிப் பெரும் பள்ளம். நெடுகிலும் உயர் மரங்கள். பச்சை செறிந்த மரத்தலைகள். வகை வகைப் பூக்கள். காடாய் அடர்ந்து வளர்ந்த செடிகள், கொடிகள்.

அவை பெருமாளுக்குப் பயம் தந்தன. தனிமையே அவனை அச்சுறுத்தியது. ஆழ்ந்த அமைதி - சத்தங்களற்ற இயற்கைச் சூழ்நிலை - அவனைக் கலவரப்படுத்தியது.