பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனநிலை 275

அவனும் பூசைப் பொருள்களுடன் கிளம்பிவிட்டான். அவை ஒரு சுமையும் இல்லை. ஒரு துணிப் பையில் கனமற்றே இருந்தன.

பெருமாள் நடந்தான். தனிமையும் தானுமாய் - மலைப் பகுதிகளினூடே சென்ற ஏற்ற இறக்க ஒற்றையடித் தடத்தின் வழியாக. நடக்க நடக்க வழி வளர்ந்து கொண்டே இருந்தது.

கற்சுவரென, பெரும் மதிலென, வளர்ந்து காணப்பட்ட மலையின் தொடர்பகுதிதான் அவனுக்குத் துணை வந்தது. அதன் தோற்றம் அவனுக்கு அலுப்பு ஏற்படுத்தியது. அதனுடைய உயரமும், பரப்பும், சர்வ வியாபகமும் அவனை என்னவோ செய்வது போலிருந்தது. மலையின் நெடுகிலும், பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும், தூரத்து உயர் முடிகளிலும் மெளனமாய் நின்ற மரங்களின் அடர்த்தியும், காட்டின் செறிவும், மிகமிக உயரே விரிந்து கிடந்த வானமும் அவனைச் சின்னவனாய், அல்பமாய், உணரச் செய்தன. இவற்றின் அருகே, இவற்றின் நடுவே, நாம் மிகச் சிறு உருவம்; நாம் ஒன்றுமேயில்லை என்றொரு நினைப்பு அவனுள் ஊர்ந்தது.

நடக்க நடக்க, உயர்ந்து செல்லும் தனிப் பாதையில் மேலே ஏற ஏற, இந்தச் சிறுமை உணர்வு. வலுப்பெற்றது. அது ஏன் - என்னது என உணர முடியா ஒருவிதக் குழப்பத்தை - அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பீதியை - அவனுக்குள் பரவச் செய்தது.

அது பகல் நேரம் தான். வெயில் ஒளிமயமாய்ப் படிந்து கிடந்தது. சூழ்நிலை - மலைப்பகுதிகள் மரங்கள், உயர்வானம் - எல்லாம் பளீரெனப் பிரகாசித்தன. அவை அவனுடைய வெறுமையை, மனிதனின் சிறுமையை, தனக்கு எடுத்துக் காட்டுவதாகவே பெருமாளுக்குத் தோன்றியது. அவனுள் ஒரு வேதனை - அமைதியற்ற தன்மை - அழுத்தியது. திக்குத் தெரியாத பெரும் வெளியில் துணையற்று விடப்பட்ட சிறு பிள்ளை என அவன் தன்னை உணர்ந்தான். தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், ராட்சதத்தனமான சுற்றுப்புறத்தில், செயலற்ற தன்மையில் தனித்து விடப்பட்ட ஒரு பரிதாப நிலையில் அவன் இருப்பதாக அவன் மனம் கருதியது.

அந்த நிலை அவனது சோகத்தை அதிகப்படுத்தியது. ஓங்கி ஓங்கி வீசி எழும் அலைகள் புரளும் கடல் ஒரத்தில் முன்பொரு சமயம் அவன் அப்படித்தான் உணர்ந்தான். பாலை என விரிந்து கிடந்த ஒரு மணற்பெருவெளியில் ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய உணர்வு அவனை இப்படித் தாக்கியதுண்டு. இப்போது இந்த நீண்ட நெடிதுயர்ந்த தனிமையின் ஆழ்ந்த