பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 வல்லிக்கண்ணன் கதைகள்

அவள் போக்கு புருஷன்காரனுக்கு வெறுப்பு தர ஆரம்பித்தது.

'நான் தினைச்சிருந்தால் நல்ல சினிமா ஸ்டாரு ஆகியிருப்பேன், தெரியுமா? என்னை சினிமாவிலே சேர்த்து விடறதாக்கூட ஒருவர் முன்வந்தாரு. அதுக்குள்ளாரே எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிட்டாங்க' என்று அவனிடமே அவள் ஒரு சமயம் கூறினாள்.

'யாருடி அவன்?' என்று உறுமினான் குப்புசாமி.

அவள் சொன்னாள். அவள் பேரில் அவனுக்கு சந்தேகம்தான் ஏற்பட்டது. அவளை உறுத்துப் பார்த்தான்.

'எனக்கு நடிக்கத் தெரியாதுன்னு நினைக்கிறேளோ? எனக்கா தெரியாது? நான் ஸ்கூல்லே படிச்சப்போ, ஆண்டு விழா நாடகங்களிலே நடிச்சிருக்கேன், தெரியுமா?’ என்று உற்சாகமாகவும் பெருமையோடும் பேசினாள் அவள்.

அவள் எதிர்பாராதது நடந்தது. அவள் கன்னத்தில் பளாரென ஒரு அறை விழுந்தது.

'எனக்கும் எங்க குடும்பத்துக்கும் கேவலம் உண்டு பண்ணனும்னே நீ வந்திருக்கே! சினிமாவாம், நடிப்பாம்! எவனோ சேர்த்து விடுறேன்னு சொன்னானாம். சாக்கிரதையா இருந்துக்கோ. தப்புத் தவறா நடந்தே உன்னை கொலை பண்ணிப் போடுவேன். எலியைக் கொல்லுற மாதிரி உன்னை ஒழிச்சுக் கட்டிருவேன்’ என்று கறுவினான் கணவன்.

அவன் பார்த்த பார்வையும், அவன் நின்ற நிலையும், அப்போது அவனுடைய கைகள் - கை விரல்கள் - முன் நீண்டு துடித்த துடிப்பும், அவன் அப்படிச் செய்யக் கூடியவன்தான் என்ற நினைப்பை, அச்சத்தை, அவளுள் விதைத்தன. அவன் மீது அவளுக்கு உள்ளுற பயம் ஏற்பட்டது. அவனிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்தது. .

ரஞ்சிதத்துக்கு அந்த ஊரும், வீடும், சுற்றமும் சூழலும் பிடிக்காத விஷயங்களாக மட்டுமில்லாது, தன்னை ஒடுக்கி அடக்கித் தனது சந்தோஷங்களை சிதைத்து, தன்னுடைய வாழ்வையே பாழடிக்கிற பாழ் நிலமாய், படுகுழியாய், பயங்கர நரகமாய் தோற்றம் கொண்டன.

தூரத்து டவுனும், நாகரிகமும், உல்லாசப் பிரியர்களும், அவற்றுக்கும் அப்பால் தொலைதுார நாகரிகப் பெருநகரமும், சினிமா உலகமும் குளுகுளு பசுமைகளாய் புன்னகைத்தன. கண் சிமிட்டின. அவளுக்கு ஆசை காட்டின. .