பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது விழிப்பு 59

எழுதினான். அவன் உள்ளம் சதா உச்சரித்துக் கொண்டிருந்த ஒரே மந்திரம் - 'எனக்கு ஒரு வேலை வேண்டும்.'

அவன் ஒரே ஒரு வேலைக்குத் தான் லாயக்கு - கிளார்க் வேலைக்கு. அரசு அலுவலகமோ, தனியார் கம்பெனியோ, பாங்கோ, வியாபார அமைப்புகளோ எதுவா இருந்தாலும் சரி. படித்து பட்டம் பெற்றவனுக்கு வாழ்வு அளிக்கக் கூடிய கிளார்க் பதவியைத் தந்து உய்விக்க வேண்டும். படித்து பாஸ் பண்ணியவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.

அவர்களை பெற்றவர்களும் மற்றவர்களும் விரும்புவதும் இதையே தான். 'எவனுக்காவது சம்திங் கொடுக்கணுமின்னாலும் கொடுத்துப் போடலாம். அதுக்கு வழி இருக்கா பாரு?' - பெரியவர்கள் தூண்டுகிறார்கள். பையன்கள் வழி தேடுகிறார்கள். சிலருக்கு சான்ஸ் அடிக்கிறது? பலருக்கு ஏமாற்றம், தோல்வி, விரக்தி!

அவன் நிலையும் அதே தான்.

அவன் எவ்வளவோ முயன்றான். எத்தனை எத்தனை அப்ளிகேஷன்கள் எழுதினான்! எத்தனை பெரிய மனிதர்களை பார்த்தான் அநேக நிறுவனங்கள் நடத்துகிற இன்டர்வ்யூ என்கிற கண் துடைப்பு நாடகங்கள் எத்தனையில் பங்கு கொண்டான். எல்லாம், அவன் உள்ளக் கோயிலில் கொலு இருந்த நம்பிக்கை யைக் கீழே இழுத்துத் தள்ளி மிதித்துச் சமட்டிய படையெடுப்பு கள் ஆயின. அந்த இடத்தை இருண்ட மடமாக மாற்றி, அங்கே விரக்தி, வேதனை, சோர்வு, உற்சாக வறட்சி முதலிய குட்டிச்சாத்தான்களை ஆடவைத்த போக்குகள். அவை.

அவனைச் சுற்றி ஆசைக் கொலுக்கள் அமைந்த பெற்றோர் காலநிலை மறந்து - சமுதாய நிலையை எண்ணாது - நாட்டின் நிலைமையைக் கருதாது - ஆத்திர நிலையை அடைந்தார்கள். வேலை எதுவும் பாராமல் இப்படி வெட்டிப் பொழுதுபோக்கும் 'தெண்டச்சோறு’ ஆக இருந்தால் என்ன அர்த்தம்? வேலைக்கு தீவிர முயற்சிகள் செய்யாமல் வீட்டிலே உட்கார்ந்து எத்தனை காலத்துக்கு சாப்பிட முடியும்? இவ்வாறான கேள்விக்கணைகள் அவர்களிடமிருந்து புறப்பட்டு அவனைத்தாக்கி தொல்லை கொடுத்தன.

அவனுக்குத் தெரிந்தது - அவன் இதுவரை செய்து வந்த வேலை - படிப்பது தான். இன்னும் அதை அவன் செய்யத் தயார் தான். 'மேல் படிப்பு’க்கும் குறைவில்லை. படித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் படிப்புச் செலவுக்குத் தேவைப்படும் பணத்துக்குத் தான் பஞ்சம். .