பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 வல்லிக்கண்ணன் கதைகள்

சமயங்களில் எல்லாம் - எப்போதும் எங்கும் எல்லோருக்குமே, சுவையாக எடுத்துச் சொல்வதற்கு ஜிலுஜிலுப்பான அனுபவங்கள் இருந்தன. பலப் பலருக்கும் வாழ்க்கையில் அவை நிறையவே சித்தித்ததாகத் தோன்றின.

ஆனால் அவனுக்கு அப்படிப் பெருமையாக, மகிழ்ச்சியோடு எடுத்துச் சொல்வதற்கு ஒரு மண்ணும் இல்லை.

- என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கிறது! வெறும் காஞ்ச பய வாழ்க்கை! வயது ஆனதுக்கு மட்டும் குறைச்சலில்லை. குட்டிச்சுவருக்கு ஆகறது போல, ஐம்பதைத் தாண்டிவிட்டது! பசுமையான அனுபவம், இனிமையானது, மற்றவர்கள் மத்தியிலே - ஜவுளிக்கடைக்காரன் பகட்டாக, பளபளப்பாக, வசீகரமாக எடுத்துப் பரப்புகிற ஜோர் ஜோரான துணிகளைப் போல் அனைவரையும் கவரும்படி எடுத்துச் சொல்லக் கூடிய அனுபவங்கள் ஒன்றிரண்டுகூட நம்ம வாழ்வில் இல்லையே!

சுயம்புவின் நெஞ்சு ஏக்கப் பெருமூச்சை நீள உயிர்க்கும். தானாகவே அவன் மனசில் குத்தாலம் பிள்ளை அண்ணாச்சியின் நினைவு நிழலிடும்.

குத்தாலம் பிள்ளை சுவாரஸ்யமான மனிதர். அவர் இருக்கிற இடத்தில் கலகலப்பும் இருக்கும். சிரிப்பு அடிக்கடி கலீரிடும். மத்தாப்பூப் பொறிகள் மாதிரி அவரிடமிருந்து ரசமான தகவல்கள் பொங்கிப் பூத்துச் சிதறிக் கொண்டே இருக்கும். பேச்சிலே மன்னன். பாவி மனிதனுக்கு அனுபவங்கள் எங்கிருந்து எப்படித்தான் வந்து சேருமோ!'

சுயம்புலிங்கத்துக்கு அது பெரிய ஆச்சரியம். குத்தாலம் பிள்ளை பேசுவதைக் கேட்கிறபோதெல்லாம், 'இதிலே நூத்திலே ஒரு பங்கு நமக்கு ஏற்பட்டாலும் போதுமே! மீதி நாளெல்லாம் அசை போடுவது போல் ஆனந்தமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாமே!’ என்று அவன் மனம் ஏங்கும்.

அநேகமாக ஆண்கள் அனைவரும் பொம்பிளைகள் பற்றித்தான் பேசினார்கள். தங்களுக்கு அந்த லைனில் கிடைத்த வெற்றிகள் பற்றி, எதிர்பாராது வந்து சேர்ந்த ரொமான்ஸ்கள் பற்றி; ரயில் பயணத்தில் கிடைத்த திடீர் காதல்; புதிய இடத்தில் அகப்பட்ட தொடர்புகள்; தேடிப்போன அனுபவங்கள்; ரித்ஷாக்காரர்கள் துணையோடு நேர்ந்த உறவுகள்; பக்கத்து வீட்டில் பழுத்துக் கனிந்து தங்கள் கையில் வந்து விழுந்த உணர்ச்சிக் க(ன்)ணிகள் பற்றி எல்லாம் அலுப்பில்லாமல் சொன்னார்கள்.