பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 வல்லிக்கண்ணன் கதைகள்

'மிருகங்கள்! வெறிபிடித்த மிருகங்கள்' என்று முணுமுணுத்தாள் அவள். 'தாராளமாகப் பேசிப் பழகினேன் எனபதறகாக இப்படியா நடந்து கொள்வது? சீ' என்று குமைந்து கொதித்தது அவள உள்ளம்.

'எல்லோரும் கெட்ட எண்ணத்தோடு பழகுதிறவர்கள்தாம் என்பது உனக்கு இப்பொழுது தான் புரிகிறது. பெண் ஒருத்தி சிரித்துப் பேசினால் அதன் பின் வேறு கருத்து பதுங்கிக் கிடக்கும் என்று இவர்கள் ஏன் எண்ணவேண்டுமோ, எனக்குத் தெரியவில்லை. ஃபிரண்ட்ஸ்களாகப் பழக அவர்கள மனம இடம் தராது போலிருக்கு. எப்பவும் வேறு ரக நினைப்புகள் தான் போலிருக்கு...'

இந்த ரீதியில் அவள் மனம் புழுங்கிப் புகைந்தது. அவ் அலுவலகத்தில் இனி கால் பதிக்கப் போவதில்லை என்று தீர்மானித்த பிறகே அவள் உள்ளத்தில் சிறிது அமைதி படர்ந்தது.

மாதவிக்குட்டி தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டாள்; தாங்கள் இருக்கிற திசையை எட்டிப் பார்க்கவே மாட்டாள் என்பதை அறிந்ததும், பாலகிருஷ்ணன் வகையறா மனம் போன போக்கில் விமர்சனம் கூறுவதில் மகிழ்வுற்றனர்.

'ஏ ஒன் ஏமாற்றுக்காரி! சரியான மினுக்கி! முதல்தர பட்டர்ஃபிளை!' என்று வயிற்றெரிச்சலோடு முனகினான் ரகுநாதன்.

பாலகிருஷ்ணன் 'பச்சையான வார்த்தை'களில் வசைபாடித் தன் ஆத்திரத்தைத் தணிக்க முயன்றான். 'தேவடியாள், பொறுக்கி’ என்றெல்லாம் அர்ச்சனை செய்தான்.

'பசப்புக்காரி. மயக்கிப் பிடுங்கித் தின்கிற வஞ்சகி' என்றே எல்லோரும் அவளைப் பற்றி முடிவு கட்டினர்.

‘மாதவிக்குட்டி உங்களை எல்லாம் ஏமாற்றி விட்டாள் என்பது சரியாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஏமாற்றும்படி தூண்டியதே நீங்கள் தான்' என்று பரமசிவம் புன்முறுவலோடு சொன்னார்.

'நன்றாக இருக்கிறதே நீங்கள் சொல்வது! நாங்கள் கொடுத்ததை எல்லாம் வாங்கி மொக்கு மொக்கென்று மொக்கினாளே அந்தத் தடிச்சி! மிட்டாய் கொடுத்தால், மில்க் சாக்லட் நன்றாக இருக்கும் என்றும், சாக்லட் சப்ளை செய்தால் ஐஸ்கிரீம் பிடிக்கும் என்றும் சொல்லி, தனக்குப் பிடித்ததைக் கேட்டு வாங்கித் தன் வயிற்றை ரொப்பிக் கொண்டிருந்தாளே. நாங்களா அப்படி எல்லாம் செய்யும்படி சொன்னோம்?’ என்று சடபடவெனப் பொரித்து தள்ளினான் பாலகிருஷ்ணன்.