பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

எஸ். எம். கமால்

பாளையங்களில் பாளையக்காரர்கள் வசூலித்த தொகையைவிட 117 சதவீதம் கூடுதலாக வரி வசூலித்தார்.[1]

மறவர் சீமையில் 739 கிராமங்களின் மகசூல் விளைச்சல் கி.பி. 1797-98ல் ஸ்டார்பக்கோடா 53,500 என மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்த கிராமங்களுக்கு வரியாக ஸ்டார் பக்கோடா 71,629 என விதிக்கப்பட்டது. இதனால் குடிகள் விளைவித்த மகசூல் அனைத்தையும், கும்பெனியார் வசூலித்ததுடன் எஞ்சிய வரித்தொகையை எவ்விதம் வசூலிப்பது என்ற சிந்தனையில் முனைந்தனர். உழவு மாடுகள், தட்டுமுட்டுச் சாமான்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. உயிர் வாழ்வதற்குத் தேவையான விளைச்சலில் ஒரு மணிகூட உழவர்களுக்குக் கிடைக்கவில்லை. பசிக்கொடுமையால் மிகுதியான மக்கள் மடிந்தனர். பலர் அந்நியப் பகுதிகளுக்கு ஓடி உயிர் பிழைத்தனர்.[2]

வெயிலையும் குளிரையும் தாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் இந்த அவல நிலையைவிட, நெசவாளர்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. கெடுபிடி வசூல், குழப்பம், கிளர்ச்சி ஆகிய காரணங்களினால் நெசவு உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்பட்டன. கும்பெனியார் பல ஊர்களில் நெசவாளிகளை பலவந்தப்படுத்தி, அவர்கள் உற்பத்தி செய்த துணிகளை மிகக் குறைந்த விலைக்கு எடுத்துக் கொண்டனர். இன்னும் சில ஊர்களில் உற்பத்தி செய்த துணி மடி ஒவ்வொன்றிலும் தங்களது முத்திரையைப் பதிவு செய்து அதற்கான தீர்வை ஒன்றையும் கும்பெனியார் வசூல் செய்தனர். இந்த முத்திரை வரியைச் செலுத்தினால்தான் நெசவாளிகள் தங்களது துணியை விற்கலாமென்ற நிலை ஏற்பட்டது. உற்பத்தி செய்த எல்லா மடிகளுக்கும் தீர்வை செலுத்தியதைத் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கு உள்ள நெசவாளர்களது இல்லங்களில் திடீரென நுழைந்து அவர்களது துணிகளைக் கைப்பற்றினார்.[3]


  1. Madura District Records, vol. 1179 D, 1-8-1800, p. 193
  2. Revenue Consultations, Vol. 91, 14-12-1798, pp. 4440-45
  3. Public Consultations, Vol. 244, 9-5-1800, pp. 1415-21