பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(10) கட்டுரையாளர் விந்தன் - வல்லிக்கண்ணன் எழுத்தாளர் விந்தன் என்றால், “பாலும் பாவையும்’ நாவலாசிரியர் என்ற நினைவுதான் வாசகர்கள் பலருக்கும் எழும். முல்லைக்கொடியாள். ஒரே உரிமை முதலிய சிறப்பான சிறுகதைகளின் ஆசிரியர் என்றும் அறியப்பட்டிருப்பவர் அவர். எழுத்தாளர் விந்தன் தனித்தன்மை உடைய சிந்தனைக் கட்டுரைகளும் எழுதியிருப்பவர் என்பது பரவலாக வாசகர்களுக்குத் தெரியாது. விந்தன் சிறந்த கட்டுரையாளர் என்பதை மு.பரமசிவம் தொகுத்து, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS) வெளியிட்டுள்ள 'விந்தன் கட்டுரைகள் என்ற புத்தகம் நன்கு எடுத்துக் காட்டுகிறது. விந்தன் எழுத்துக்களில் சிந்தனை வேகம், அறச்சிற்றம், சிறுமைகளை எள்ளிச் சிரிக்கும் இயல்பு, கசப்பில் விளைத்த அங்கதம், உயிர்த்துடிப்பு, நேரில் பேசுவது போன்ற எளிய தெளிவான நடை, புதுமை நோக்கு நிறைந்திருக்கும். அவர் கட்டுரைகளிலும் இப்பண்புகள் கலந்து காணப்படுகின்றன. "எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும், உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது நான் எழுத ஆரம்பித்த போதே எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை இவை யிரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பலன்? படிப்பதில்தான் என்ன பயன்? என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இக் குறிக்கோளை விந்தன் வெற்றிகரமாக நிறைவேற்றவும் செய்தார்.