பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

ஜேம்ஸ் ஆலன்


தனித் திறமை வாய்ந்த மனிதனைவிடச் சால்புடைய மனிதனே மக்கள் நினைவிலும், உலகத்தின் மதிப்பீட்டிலும் உயர்ந்த இடத்தை வகித்து வருகின்றான். “தன்னுரிமையான சால்பின் ஒழுக்கச் சிறப்பே இயற்கையின் விழுமிய பொருளாகும்” என்று பக்மின்ஸ்டர் கூறுகின்றார். அதுவே வீரர்களை உண்டு பண்ணுகின்ற மனிதப் பண்பு. நெறி திறம்பாத நேர்மையுடைய மனிதன் இயல்பாக எப்போதும் ஒரு வீரனாக விளங்குகின்றான். அந்த வீரப் பான்மையை வெளிக்கொணரத் வாய்ப்பே தேவைப்படுகின்றது. மேலும், அவன் எப்போதும் நிலையான மகிழ்ச்சியுடையவனாகவே இருக்கின்றான். தனித்திறமை வாய்ந்த மனிதன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக இருக்கலாம்; ஆனால் சால்புடைய மனிதன் அவ்வாறில்லை. நேர்மையின் உள்ளார்ந்த பண்பாயிருக்கின்ற நிலையான மன நிறைவை நோயோ பேரிழப்போ அன்றி இறப்போ கவர்ந்துவிட முடியாது.

நேர்மை அடுத்தடுத்த நான்கு படிகளில் அவனை ஆக்கத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. முதன் முதலில் நேர்மையான மனிதன் பிறருடைய நம்பிக்கையைப் பெற்றுவிடுகின்றான்.

இரண்டாவதாக அவர்கள் அவன் மீது நம்பிக்கை கொள்கின்றனர்.

மூன்றாவதாக இந்த நம்பிக்கை என்றுமே மீறாத நிலையில் ஒரு நற்பெயரை உண்டு பண்ணுகின்றது; நான்காவதாக, நற்பெயர் மேலும் மேலும் பரவுகின்றது; எனவே, வெற்றியைக் கொணருகின்றது.